Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 03:11 AM

கார்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை குறைக்க இந்தியாவின் அணு மின் உற்பத்தி10 ஆண்டில் 3 மடங்கு அதிகரிக்கும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

கார்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக அடுத்த10 ஆண்டுகளில் அணு மின் உற்பத்தி 3 மடங்கு அதிகரிக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கடந்த ஏப்ரல் மாதம் காணொலி மூலம் நடைபெற்ற இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். அப்போது, ‘இந்திய-அமெரிக்க காலநிலை மற்றும் தூய எரிசக்தி நிகழ்ச்சி நிரல் 2030 ஒத்துழைப்பு’ என்ற பெயரிலான இலக்கை அறிவித்தனர். பாரிஸ் ஒப்பந்தத்தின்படி கார்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைத் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும்.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் எரிசக்தித் துறை துணைசெயலாளர் டேவிட் எம் டர்க்தலைமையிலான குழு இந்தியா வந்துள்ளது. இக்குழுவினருடன் பிரதமர் அலுவலக மற்றும் அணுசக்தித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர். உயிரி எரிபொருள், ஹைட்ரஜன் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு மாசுஏற்படுத்தாத தூய எரிசக்தித் துறையில் இணைந்து செயல்படுவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசும்போது, “இந்தியாவில் இப்போது அணு மின் நிலையங்களில் இருந்து 6,780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் கூடுதலாக அணு மின் நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் அணு மின் உற்பத்தி இப்போதைய அளவைப் போல 3 மடங்குக்கு மேல் (22,480 மெகாவாட்) அதிகரிக்கும். கார்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைக் குறைக்க இது பேருதவியாக இருக்கும்.

பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் மரபுசாரா எரிசக்தி உற்பத்தி படிப்படியாக அதிகரிக்க இது உதவிகரமாக இருக்கும். 2030-க்குள் நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் மரபுசாரா எரிசக்தி உற்பத்தித் திறனை 40 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இப்போதே 39 சதவீத அளவு எட்டப்பட்டுள்ளது” என்றார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x