

ஒரு டோஸ் கரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனையை இந்தியாவில் நடத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின்மூன்றாம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் நடத்த ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக்கொண்ட டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் கடந்த ஜூலை மாதம் விண்ணப்பித்திருந்தது. போதிய தரவுகள் சமர்பிக்கப்படாத நிலையில், அந்தத் தடுப்பூசியின் மூன்றாம்கட்டப் பரிசோதனைக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு அனுமதி மறுத்திருந்தது. இந்நிலையில், டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் தற்போது ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன் தொடர்பான தரவுகளை சமர்பித்ததைஅடுத்து, மூன்றாம் கட்டப் பரிசோதனைக்கு ஓப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு நாட்கள் வரை நீடிக்கும் என்பது தொடர்பான தகவல்களை டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் சமர்பித்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்ய தடுப்பூசியான, ஸ்புட்னிக்லைட் 79.4 சதவீதம் செயல்திறன்கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்படும்பட்சத்தில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் ஒரு டோஸ் தடுப்பூசியாக இது திகழும். இத்தடுப்பூசிகடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஸ்புட்னிக் லைட் செலுத்த அனுமதியளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.-பிடிஐ