10 சதவீத பணக்காரர்களிடம் நாட்டின் 50 சதவீத சொத்துகள்: தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு ஆய்வில் தகவல்

10 சதவீத பணக்காரர்களிடம் நாட்டின் 50 சதவீத சொத்துகள்: தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு ஆய்வில் தகவல்
Updated on
2 min read

இந்தியாவில் உள்ள 10 சதவீத பணக்காரர்களிடம் நாட்டின் 50 சதவீத சொத்துகள் இருப்பதாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு (என்எஸ்எஸ்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு (என்எஸ்எஸ்) நாடு முழுவதும் உள்ள சொத்துகள் யாரிடம் அதிகமாக உள்ளன என்பது தொடர்பாக கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

இதுதொடர்பாக என்எஸ்எஸ் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறி இருப்பதாவது:

நாட்டில் உள்ள ஒட்டுமொத்த சொத்துகளில் 50 சதவீதம், 10 சதவீதம் பணக்காரர்களிடம் உள்ளது. அதாவது நகர்ப்புற பகுதிகளில் 55.7 சதவீத சொத்துகள் 10 சதவீதம் பணக்காரர்களிடமும், கிராமப்பகுதிகளில் 50.8 சதவீத சொத்துக்கள் 10 சதவீத பணக்காரர்களிடமும் உள்ளன.

மிகவும் கீழ்நிலையில் உள்ள ஏழைகளிடம் ஒட்டுமொத்த சொத்துகளில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கின்றன.

அதாவது நிலம், வாகனங்கள், கட்டிடங்கள், எந்திரங்கள், விவசாய சாதனங்கள், கால்நடைகள்,பங்குச்சந்தை முதலீடுகள், வங்கிமுதலீடுகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்து சொத்துப்பட்டியலை உருவாக்கி உள்ளன.

டெல்லியின் நகரப் பகுதிகளில் 10 சதவீத பணக்காரர்களிடம் 67.9 சதவீத சொத்துகள் உள்ளன. 50 சதவீத ஏழைகளிடம் 3.5 சதவீத சொத்துகள் மட்டுமே உள்ளன.

மகாராஷ்டிராவில் நகர்ப்புறபகுதிகளில் 10 சதவீத பணக்காரர்களிடம் 61.4 சதவீத சொத்துக்களும், தெலங்கானாவில் 58.7சதவீத சொத்துகளும், கர்நாடகாவில் 56.5 சதவீத சொத்துகளும், இமாச்சலபிரதேசத்தில் 56.4 சதவீத சொத்துகளும், சத்தீஸ்கரில் 46.3 சதவீத சொத்துகளும், மேற்குவங்கத்தில் 45.4 சதவீத சொத்துக்களும், பஞ்சாபில் 44.3 சதவீத சொத்துகளும், உத்தராகண்டில் 42.7 சதவீத சொத்துகளும், காஷ்மீரில் 36 சதவீத சொத்துகளும் 10 சதவீத பணக்காரர்களிடம் இருக்கின்றன.

அதேபோல 50 சதவீத ஏழைகளிடம் மகாராஷ்டிராவில் 5 சதவீத சொத்துகளும், தெலங்கானாவில் 4.1 சதவீத சொத்துகளும், கர்நாடகாவில் 3.7 சதவீத சொத்துக்களும், இமாச்சலபிரதேசத்தில் 3.6 சதவீத சொத்துகளும், சத்தீஸ்கரில் 12.6 சதவீத சொத்துகளும், மேற்குவங்கத்தில் 7.4 சதவீத சொத்துக்களும், பஞ்சாபில் 10 சதவீத சொத்துகளும், உத்தராகண்டில் 5.3 சதவீத சொத்துகளும், காஷ்மீரில் 14.9 சதவீத சொத்துகளும் உள்ளன. இதேபோல டெல்லியின்கிராமப்பகுதிகளில் 10 சதவீத பணக்காரர்களிடம் 80.8 சதவீத சொத்துகள் உள்ளன.

பஞ்சாபில் 65.1 சதவீத சொத்துக்களும், உத்தராகண்டில் 57 சதவீத சொத்துகளும், மத்தியபிரதேசத்தில் 51.9 சதவீத சொத்துக்களும், ஹரியாணாவில் 50.4 சதவீத சொத்துகளும், ஒடிசாவில் 40.4 சதவீத சொத்துகளும், அசாமில் 39.7 சதவீத சொத்துகளும், தெலங்கானாவில் 38.5%, ஜார்க்கண்டில் 37.8%, காஷ்மீரில் 32.1% சொத்துக்களும் 10 சதவீத பணக்காரர்களிடம் இருக்கின்றன.

இதேபோல டெல்லியில் 2.1%, பஞ்சாபில் 5.2%, உத்தராகண்டில் 8.2%, மத்திய பிரதேசத்தில் 10.8%, ஹரியாணாவில் 7.5%, ஒடிசாவில் 14.4%, அசாமில் 14.5%, தெலங்கானாவில் 14.6%, ஜார்க்கண்டில் 17.7%, காஷ்மீரில் 18% சொத்துகளும் 50 சதவீத ஏழைகளிடம் இருக்கின்றன.

நாட்டில் கிராம பகுதிகளில் ஒட்டுமொத்தமாக உள்ள ரூ.238.1 லட்சம் கோடி சொத்துகளில் 10 சதவீத பணக்காரர்களிடம் ரூ.132.5 லட்சம் கோடி சொத்துகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in