Last Updated : 16 Sep, 2021 03:11 AM

 

Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 03:11 AM

பழைய இரும்பு பொருட்களை கொண்டு 14 அடியில் பிரதமர் மோடிக்கு சிலை: பெங்களூருவில் விரைவில் திறப்பு விழா

மோடி சிலையுடன் சிற்பி வெங்கடேஷ்வர ராவ் மற்றும் அவரது மகன் ரவி.

பெங்களூரு

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள‌ தெனாலியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்வர ராவ். ‘சூரிய சிற்பகலா சாலை' என்ற சிற்ப பட்டறையை நடத்தி வருகிறார். இதுவரை 100 டன் எடையுள்ள பழைய இரும்பு பொருட்களைக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகளை இந்த குழுவினர் உருவாக்கியுள்ளனர். இதற்காக பல்வேறு சர்வதேச அளவிலான அங்கீகாரங்களையும் இந்த குழுவினர் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த பாஜக கவுன்சிலர் மோகன் ராஜூ, பிரதமர் மோடி சிலையை செய்து தருமாறு கோரினார். அதன் பேரில் வெங்கடேஷ்வர ராவ் தனது மகன் உட்பட 15 கலைஞர்களுடன் சேர்ந்து 14 அடி உயரத்தில் மோடி சிலையை உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து வெங்கடேஷ்வர ராவ் கூறும்போது,'' எனது குடும்பம் சிற்பகலை பாரம்பரியம் மிக்கது. 5 தலைமுறைகளாக வெண்கல சிலை செய்து வருகிறோம். எனது மகன் ரவி, ஓவியம், சிற்பம் உள்ளிட்ட நுண்கலைகளில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அவர்தான் முதலில் பழைய இரும்பு பொருட்களை கொண்டு சிலைகளை உருவாக்கும் யோசனையை கூறினார். முதல்கட்டமாக அம்பாசிடர் கார், டிராக்டர், தேசிய சின்னம் உள்ளிட்டவற்றை உருவாக்கினோம். பின்னர் 75 ஆயிரம் நட்டுகளை கொண்டு காந்தியின் சிலையை உருவாக்கினோம். எங்களின் மிக நுட்பமான‌ கலை படைப்புக்காக சர்வதேச அளவில் 4 விருதுகள் கிடைத்தன.

பாஜக கவுன்சிலர் மோகன் ராஜ் கேட்டுக் கொண்டபடி, பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள், சக்கரம், நட், போல்ட், இரும்பு சங்கிலி உள்ளிட்ட பொருட்களை வாங்கினோம். 15 கலைஞர்கள் 2 மாதங்கள் இரவு பகலாக கஷ்டப்பட்டு, 2 டன் பழைய இரும்பு பொருட்களை கொண்டு பிரதமர் மோடி சிலையை உருவாக்கினோம்'' என்றார். இந்த சிலை இவ்வார இறுதியில் ஆந்திராவில் இருந்து பெங்களூரு கொண்டுவரப்பட உள்ளது. பாஜக தேசியத் தலைவர்கள் முன்னிலையில் நடத்தப்படும் விழாவில், மோடி சிலை திற‌க்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் பாஜக கவுன்சிலர் மோகன்ராஜ் ஈடுபட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x