

கேரளாவில் கரோனா பாதிப்பு உச்சத்தை கடந்துவிட்டது என எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் அண்மைகாலமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.
கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு தொடர்ந்து கரோனா தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து காணப்பட்டது. நாட்டின் மொத்த கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஏறக்குறைய 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
இந்தநிலையில் கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை கடந்துவிட்டது என எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
செப்டம்பர் முதல் வாரத்தில் ஒரு நாளில் 30,000 க்கும் மேற்பட்ட கோவிட் -19 பாதிப்புகள் கேரளாவில் பதிவாகின. அதன்பிறகு கேரளாவில் தினசரி பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.
வடகிழக்கு போலவே கேரளாவிலும் பாதிப்பு குறைகிறது. கேரளாவில் முந்தைய செரோ பரிசோதனை பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதை தெரிவித்தது ஆனால் சமீபத்திய செரோ சோதனையில் 46 சதவிகிதம் தடுப்பூசி அல்லது நோய்த்தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு திறன் இருப்பதை காட்டுகிறது. மாநிலத்தில் கரோனா பரவல் வேகத்தை மெதுவாக்குகிறது.
கடந்த 2-3 மாதங்களில் பரவிய வைரஸின் தரவைப் பார்க்கும்போது கேரளா அதன் உச்சத்தை கடந்துவிட்டதாக தோன்றுகிறது. அடுத்த 2 வாரங்களில், தொற்று எண்ணிக்கை சரியத் தொடங்கும்.
அக்டோபர் தொடக்கத்தில் கேரளாவில் கோவிட் பாதிப்பு வெகுவாக குறைந்து விடும்.கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை கடந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.