

கர்நாடக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூருவில் உள்ள விதானசவுதாவில் திங்கட்கிழமை தொடங்கியது. இந்நிலையில் விதானசவுதாவின் 2-வது மாடியில் உள்ள அறை எண் 208-ல் 2 பீர் பாட்டில்கள் மேஜை மீது வைக்கப்பட்டிருந்தன. இதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்கள் மட்டுமின்றி ஆளும் பாஜகவினரும் இதனை கண்டித்துள்ளனர்.
இதுகுறித்து விதானசவுதா பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, “கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறுகிய காலத்திலேயே முடிக்கப்பட்டது. தொற்று காரணமாக மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், அரசியல் கட்சியினர் ஆகியோர் விதானசவுதாவுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே வந்தனர். பெரும்பாலான அதிகாரிகள் வீட்டில் இருந்தவாறே பணியாற்றினர்.
6 மாதங்களுக்கு பின் திங்கட்கிழமை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதால் மூடப்பட்டிருந்த அறைகள் திறக்கப்பட்டன. அப்போது காலி பீர் பாட்டில்கள் கிடந்தன. இதை யார் பயன்படுத்தினார்கள் என விசாரணை நடத்திவருகிறோம். இரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரையும் விசாரித்து வருகிறோம். இங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆராயும் பணி தொடங்கியுள்ளது” என்றார்.
இதனிடையே பீர் பாட்டில்கள் கிடந்த விவகாரம் குறித்து விசாரித்து, அறிக்கை அளிக்கும்படி விதானசவுதா பாதுகாப்பு போலீஸ் அதிகாரிக்கு சட்டப்பேரவைத் தலைவர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி உத்தரவிட்டுள்ளார்.