Last Updated : 10 Feb, 2016 04:54 PM

 

Published : 10 Feb 2016 04:54 PM
Last Updated : 10 Feb 2016 04:54 PM

காற்றைத் தூய்மையாக்கும் எந்திரமா கார்கள்?- மத்திய அமைச்சர் ஜவடேகர் காட்டம்

ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் தயாரிப்பு நிறுவன தலைமைச் செயலதிகாரியின் கூற்றுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘காற்றைச் சுத்தம் செய்யும் எந்திரமாக காரை நான் ஒரு போதும் கருத முடியாது’ என்று கூறியுள்ளார்.

அதாவது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் நிறுவன தலைமைச் செயலதிகாரி ரால்ப் ஸ்பேத், சமீபத்தில், தங்கள் நிறுவன உயர் தொழில்நுட்ப கார்கள் வெளியேற்றும் புகையை விட தங்கள் கார்கள் உள்வாங்கும் டெல்லி காற்றின் மாசு படுமோசமாக உள்ளது என்று கூறியிருந்தார்.

மேலும் தங்களது புதிய தொழில்நுட்ப கார்கள் டெல்லி நகர காற்றில் உள்ள மாசுகளை தூய்மை செய்யும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதனையடுத்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், புதுடெல்லியில் ஸ்மார்ட் சிட்டி தொடர்பான அசோசாம் கூட்டத்தில் கலந்து கொண்டு கூறும்போது,

“கார் உற்பத்தியாளர்கள் சில பைத்தியக்காரத்தனமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கரியமிலவாயுவை வெளியேற்றாத கார்கள் பற்றி நான் ஒரு போதும் கேள்விப்பட்டதில்லை. நான் அப்படி ஒரு கார் இருப்பதாகக் கருதவில்லை. ஆனால் சிலர் இப்படி பைத்தியகாரத்தனமாக கருதினால் அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை.

கார்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளின் தரத்தில்தான் இதற்கு விடை உள்ளது” என்றார்.

ஜேஎல்ஆர் கார் உற்பத்தி நிறுவனத்தின் இத்தகைய கோரல்களை சுற்றுச்சூழல் அமைப்பான சுற்றுச்சூழல் அறிவியல் மையம் "தவறான வழிகாட்டுதல்" என்றும் ‘பொறுப்பற்ற கருத்து’ என்றும் வர்ணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x