

முந்தைய ஆட்சியாளர்கள் நாட்டை கொள்ளை அடித்தனர், அவர்களில் பலர் சிறையில் உள்ளனர் என பிரதமர் மோடி கூறினார்.
தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர், கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான ராஜா மகேந்திர பிரதாப் சிங் நினைவாக பல்கலைக்கழகம் அலிகரில் அமைக்கப்படுகிறது.
அலிகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி புதிய பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதுபோலவே அலிகாரில் அமைக்கப்படவுள்ள உத்தரப் பிரதேசத்தின் பாதுகாப்பு தொழில் வழித்தடத்தையும் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
உத்தர பிரதேசத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசும், முதல்வர் யோகி தலைமையிலான மாநில அரசும் இணைந்து பணியாற்றி வருகின்றன. சிறிய மற்றும் பெரிய முதலீட்டாளர்களை உ.பி. கவர்ந்துள்ளது. தொழில் செய்வதற்கு சரியான சூழலை உ.பி. அரசு உருவாக்கி உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கி யோகி அரசு செயலாற்றி வருகிறது.
ஒரு காலத்தில் நிர்வாகத்தை குண்டர்கள் கையில் எடுத்தனர். ஊழல் செய்தவர்களின் கைகளில் ஆட்சி இருந்தது. தற்போது, அவர்கள் பலர் சிறையில் உள்ளனர். மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படும் சக்திகளுக்கு எதிராக நாம் செயல்பட வேண்டி உள்ளது.
பாதுகாப்பு துறையில் இறக்குமதியை சார்ந்திருந்த இந்தியா, தற்போது பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து போர்கப்பல்கள், ட்ரோன்கள், விமான உதிரிபாகங்கள் மற்றும் நவீன குண்டுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
நமது நாடு மட்டும் அல்லாமல், ஒட்டு மொத்த உலகமும் இதை பார்க்கிறது. பாதுகாப்பு துறை சார்ந்த ஏற்றுமதியில், இந்தியா புதிய அடையாளத்தை நோக்கி முன்னேறுகிறது.
இவ்வாறு பிரதமர் பேசினார்.