

2021-22 முதல் காலாண்டில் நிர்ணயிக்கப்பட்ட மூலதனச் செலவை எட்டியுள்ள கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்கள் கூடுதலாக ரூ. 15,721 கோடி கடனாகப் பெற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
2021-22 முதல் காலாண்டில் மத்திய நிதி அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவிலான மூலதனச் செலவை 11 மாநிலங்கள் எட்டியுள்ளன.
இதையடுத்து, ஆந்திரப்பிரதேசம், பிஹார், சத்தீஸ்கர், ஹரியாணா, கேரளா, மத்தியப்பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்ட் ஆகிய 11 மாநிலங்கள் ஊக்கத்தொகையாக, கூடுதலாக ரூ. 15,721 கோடி கடனாகப் பெற செலவினத்துறை அனுமதி அளித்துள்ளது.
மாநிலங்களின் மூலதனச் செலவை அதிகரிப்பதற்கு கூடுதல் நிதி ஆதாரங்கள் உதவிகரமாக இருக்கும்.
கூடுதல் கடனைப் பெறுவதற்கு 2021-22ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட மொத்த இலக்கில் 15 சதவீதத்தை முதல் காலாண்டிலும், 45 சதவீதத்தை இரண்டாவது காலாண்டிலு,ம் 70 சதவீதத்தை மூன்றாவது காலாண்டிலும், மார்ச் 31, 2022 இல் 100 சதவீத இலக்கையும் மாநிலங்கள் அடைய வேண்டும்.
மாநிலங்களின் மூலதனச் செலவின் அடுத்த ஆய்வை செலவினத் துறை வரும் டிசம்பர் மாதம் மேற்கொள்ளும். அப்போது செப்டம்பர் 30, 2021 வரை மாநிலங்கள் மேற்கொண்டுள்ள மூலதனச் செலவுகள் மதிப்பீடு செய்யப்படும்.
அதன் பிறகு 2022 மார்ச் மாதத்தில் முதல் மூன்று காலாண்டுகளுக்கான மூலதனச் செலவின் அடிப்படையில் மூன்றாவது ஆய்வு நடத்தப்படும். இறுதிக்கட்ட ஆய்வு 2022 ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்படும். 2021-22ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட மூலதனச் செலவுத் தொகையுடன் ஒப்பிடுகையில் இந்தக் காலகட்டத்திற்கான மாநிலத்தின் ஒட்டுமொத்த மூலதனச் செலவு குறைவாக இருப்பின், 2022-23ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் கடன் தொகையில் அது சரி செய்யப்படும்.