

சர்வதேச அளவில் கூட பிரதமரால் இந்தியில் பேச முடிகிறது, பிறகு எது நம்மை சங்கடப்படுத்துகிறது, கவலைப்பட்ட நாட்கள் இனி இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
இந்திய அரசியல் நிர்ணய சபை, தேவநாகரி எழுத்து வடிவத்தில் எழுதப்படும் இந்தி மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக, கடந்த 1949-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட செப்டம்பர் 14 ஆம் நாள் இந்தி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
இந்தி தினத்தையொட்டி பல்வேறு தலைவர்களும் இன்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்தி தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:
இந்தி தினமான இன்று நாட்டு மக்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியையும் தங்கள் தாய் மொழியுடன் சேர்த்து படிப்படியாகப் பயன்படுத்துவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக முக்கியமான ஒன்றாகும்.
தாய்மொழியுடன் அலுவல் மொழியையும் சேர்த்து பயன்படுத்துவதில் தான் இந்தியாவின் முன்னேற்றம் அடங்கியுள்ளது.
நாம் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டபோது 1949 செப்டம்பர் 14-ம் தேதி அன்று தேவநாகிரி எழுத்துவடிவம் கொண்ட இந்தியை இந்த நாட்டின் அலுவல் மொழியாக இருக்கும் என்ற முடிவை நாம் ஏற்றுக்கொண்டோம். இந்தியுடன், பிராந்திய மொழிகளையும் ஏற்க முடிவு செய்தோம்.
'ஆத்மநிர்பர்' என்பது நாட்டிற்குள் உற்பத்தி செய்வது மட்டுமல்ல, நாம் மொழிகளுடன் கூட 'ஆத்மநிர்பர்' ஆக இருக்க வேண்டும். நமது பிரதமர் சர்வதேச அளவில் கூட இந்தியில் பேச முடிகிறது. பிறகு எது நம்மை சங்கடப்படுத்துகிறது. இந்தியில் பேசுவதால் கவலையாக இருந்த நாட்கள் போய் விட்டன. இனி அந்த சூழல் இல்லை.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.