Published : 14 Sep 2021 09:03 AM
Last Updated : 14 Sep 2021 09:03 AM

அலிகரில் ராஜா மகேந்திர சிங் பெயரில் புதிய பல்கலை; பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

லக்னோ

அலிகரில் அமைக்கப்படவுள்ள உத்தரப் பிரதேசத்தின் பாதுகாப்பு தொழில் வழித்தடம் மற்றும் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்தின் கண்காட்சி மாதிரிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார்.

அலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்திற்கு இன்று நண்பகல் 12 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதைத் தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் உரையாற்றுவார். அலிகாரில் அமைக்கப்படவுள்ள உத்தரப் பிரதேசத்தின் பாதுகாப்பு தொழில் வழித்தடம் மற்றும் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்தின் கண்காட்சி மாதிரிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார்.

தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர், கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான ராஜா மகேந்திர பிரதாப் சிங் நினைவாகவும், அவரை கௌரவிக்கும் வகையிலும், மாநில அரசால் இந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது.

அலிகரின் கோல் டெஹ்சிலின் லோதா கிராமம் மற்றும் முசேபூர் கரீம் ஜரௌலி கிராமத்தில் மொத்தம் 92 ஏக்கர் பரப்பளவில் பல்கலைக்கழகம் நிறுவப்படுகிறது. அலிகார் பிரிவில் இயங்கும் 395 கல்லூரிகளுக்கு இந்த பல்கலைக்கழகம் அங்கீகாரம் அளிக்கும்.

கடந்த 2018, பிப்ரவரி 21-ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற உத்தரப் பிரதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசுகையில் உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் உருவாக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

அலிகார், ஆக்ரா, கான்பூர், சித்ரகூட், ஜான்சி மற்றும் லக்னோ ஆகிய 6 இடங்களில் பாதுகாப்பு தொழில் வழித்தடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அலிகாரில் நில ஒதுக்கீடு நடைமுறை நிறைவடைந்து 19 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் இந்தப்பகுதியில் ரூ. 1245 கோடி முதலீடு செய்யும்.

ராணுவ உற்பத்தித் துறையில் நாடு தன்னிறைவை அடைவதற்கும், ‘மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிப்பதற்கும் உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் உதவிகரமாக இருக்கும்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x