

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்பு ஆலை, முழுமையாக பெண்களால் நடத்தப்படும் ஆலையாக இருக்கும் என்றும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணி அமர்த்தப்பட இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் முழுமையாக பெண்களால் நடத்தப்படும் மிகப் பெரிய தொழிற்சாலையாக ஓலாஎலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆலைஇருக்கும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு ஆலையை அமைத்து வருகிறது. ஆரம்ப நிலையில் ஆண்டுக்கு 10 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. அடுத்தகட்ட ஆண்டுகளில் அது 20 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது. கட்டமைப்புப் பணிகள் முழுமையாக முடிந்த பிறகு, அது ஆண்டுக்கு 1 கோடி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் அளவில் உலகின் மிகப் பெரிய தொழிற்சாலையாக விளங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தத் தொழிற்சாலை முழுமையாக பெண்களால் நடத்தப்படும் என்று அந்நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
“பெண்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கித் தரும் நோக்கில் இந்த முன்னெடுப்பை மேற்கொள்கிறோம். பெண்களுக்கு பொருளாதார வாய்ப்பு வழங்குவது என்பது அவர்களை மட்டும் மேம்படுத்தாது; அவர்களது குடும்பத்தையும், சமூகத்தையும் மேம்படுத்தும். வாகனத் தயாரிப்புத் தொடர்பான பணிகளில் அவர்களுக்கு பயிற்சி வழங்கபெரிய அளவில் முதலீடு செய்திருக்கிறோம். தயாரிப்பு முழுமையும் அவர்கள் பொறுப்பில் நடைபெறும். இங்கு தயாரிக்கப்படும் ஒவ்வொரு ஸ்கூட்டரிலும் அவர்களின் உழைப்பு இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.