

பஹ்ரைன் நாட்டில் பிழைப்புத்தேடி சென்ற ஆந்திரர்கள் கரோனா காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அங்கேயே அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதி உள்ளார்.
பஹ்ரைன் நாட்டில் பணி செய்ய ஆந்திராவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சென்றுள்ளனர். இவர்கள் தங்களது குடும்பத்தினரை விட்டு பிழைப்புக்காக அங்கு வேலை செய்து பணம் அனுப்பி வருகின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக கரோனா காரணமாக அங்கிருந்து இந்தியாவிற்கு விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பலர் விசா முடிந்தும் வீடு திரும்ப முடியாமலும், வேலை இல்லாமாலும் அவதிப்பட்டு வருவதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முறையிட்டனர்.
இதையடுத்து, நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், ‘பணிக்காக சென்ற ஆந்திராவை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பஹ்ரைனில் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் தாயகம் திரும்ப தக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். அங்குள்ளவர்களின் விவரங்கள் முழுவதையும் தங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். மேலும், இது தொடர்பாக ஆந்திர அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்பதையும் தெரியப்படுத்திக்கொள்கிறோம்’ என ஜெகன் குறிப்பிட்டுள்ளார். இதனால், விரைவில் பஹ்ரைனில் உள்ள ஆந்திர தொழிலாளர்கள் தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.