ஏழ்மையான ஜமீன்தார்; சரத்பவார் விமர்சனத்தை காங்கிரஸ் நேர்மறையாக எடுக்க வேண்டும்: என்சிபி கருத்து

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி | கோப்புப் படம்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி | கோப்புப் படம்.
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சி தனது வீட்டைக் கூட கவனிக்க முடியாத ஏழ்மையான ஜமீன்தாராக மாறிவிட்டது என்று சரத் பவார் கூறிய விமர்சனத்தை காங்கிரஸ் கட்சி நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மகராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து மகாவிகாஸ் அகாதி என்ற கூட்டணி அமைத்து ஆட்சியில் இருக்கிறது. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியை சரத் பவார் விமர்சித்துள்ளது சிக்கலாக மாறியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கடந்த வாரம் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ஒரு காலத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் இருந்தது உண்மைதான். இன்று சூழல் மாறிவிட்டதே. காங்கிரஸ் கட்சி ஏழ்மையான ஜமீன்தாரராக மாறிவிட்டது. தனது வீட்டைக் கூட சரிசெய்யமுடியவில்லை.

ஆனால், அனைத்து நிலங்களும் எனக்குச் சொந்தமாக இருந்தன என்று சொன்னால் போதுமா? அவை கடந்தகாலக் கதை. காங்கிரஸ் கட்சியில் தலைமைப் பதவி என்பது முக்கியமானது. அதனால்தான் காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாக எந்த ஆலோசனையும் கூறுவதில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

நவாப் மாலிக்
நவாப் மாலிக்

சரத் பவாரின் கருத்துக்கு மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படேல் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு பதில் அளிக்கும் வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமான நவாப் மாலிக் அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சியிலிருந்து தலைவர்கள் விலகி, சுயேச்சையாகத் தேர்தலில் நின்று வெல்வது வியப்பாக இருக்கிறது. சரத் பவார் இந்த விவகாரத்தைத் தனது விமர்சனத்தின் மூலம் சுட்டிக்காட்டினார்,

இதை காங்கிரஸ் கட்சி நேர்மறையாக எடுக்க வேண்டும். பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சரத் பவாரின் முயற்சிக்கு ஒவ்வொருவரும், காங்கிரஸ் கட்சி கூட பங்களிப்பு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in