உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கரோனா பரிசோதனை: வணிக பயன்பாட்டுக்கு வருகிறது

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கரோனா பரிசோதனை: வணிக பயன்பாட்டுக்கு வருகிறது
Updated on
1 min read

கரோனா தொற்றை கண்டறிய உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறை, ஊரக மற்றும் பழங்குடி பகுதிகளில் அதிகளவில் அமல்படுத்தப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) கீழ் செயல்படும் நாக்பூரில் இயங்கும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), கோவிட்-19 மாதிரிகளை பரிசோதிக்கும் உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறையின் செய்முறை நுண்ணறிவை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது.

எளிதான, வேகமான, குறைந்த கட்டணத்திலான இந்தத் தொழில்நுட்பம், நோயாளிகளுக்கு உகந்த வகையிலும், சௌகரியமாகவும் இருப்பதுடன், முடிவுகள் உடனடியாகவும் கிடைக்கப்பெறுகிறது. குறைந்த அளவிலான உள்கட்டமைப்பு வசதிகளே தேவைப்படுவதால் ஊரக மற்றும் பழங்குடி பகுதிகளில் இந்தத் தொழில்நுட்பம் அதிக பயனளிக்கும்.

சிஎஸ்ஐஆர்- தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த புதிய கண்டுபிடிப்பு, நாட்டிற்கு சேவை புரிவதற்காக அர்ப்பணிக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்திடம் இந்தத் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருப்பதன் வாயிலாக இந்தக் கண்டுபிடிப்பு வணிக ரீதியானதாக மாறுவதுடன், தனியார், அரசு மற்றும் பல்வேறு ஊரக வளர்ச்சி திட்டங்கள் மற்றும் துறைகளை உள்ளடக்கிய துறையினரிடம் உரிமம் வழங்கப்படும்.

இந்த நிகழ்வின் போது பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி, “உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறையை, நாடுமுழுவதும், குறிப்பாக, வளங்கள் குறைந்த ஊரக மற்றும் பழங்குடி பகுதிகளில் அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் விரைவான மற்றும் மக்களுக்கு உகந்த வகையில் பரிசோதனைகள் செய்யப்படுவதுடன் தொற்றுக்கு எதிரான நமது போராட்டமும் வலுப்பெறும். உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறையை வணிக ரீதியாக மாற்றுவது தொடர்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிரிவு, சிஎஸ்ஐஆர்-தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை அணுகியது”, என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in