

முதல்வர் மம்தா பானர்ஜி அரசில் கொல்கத்தாவில் கட்டப்பட்ட மேம்பாலத்தின் புகைப்படங்களை உத்தரப்பிரதேச அரசு தங்களின் விளம்பரத்தில் பயன்படுத்தியதற்கு முதல்வர் ஆதித்யநாத் அரசு மீது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள மா பாலம் நகரின் மத்தியப் பகுதியையும், சால்ட் லேக் , ராஜர்ஹட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவின் அடையாளங்களாகக் கூறப்படும் மஞ்சள் டாக்ஸி, 5 நட்சத்திர ஹோட்டல் ஆகியவற்றுக்கு அடுத்தார்போல் இந்த மா மேம்பாலமும் அமைந்துள்ளது.
ஆனால், உத்தரப்பிரதேசத்தில் ஆளும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஞாயிற்றுக்கிழமை(நேற்று) ஆங்கில நாளேடு ஒன்றில் இந்த மா மேம்பாலத்தின் படத்தை தங்கள் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களாக சித்தரித்து “யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரப்பிரதேசம் மாற்றமடைகிறது” என வெளியிட்டது சர்ச்சையானது. ஏனென்றால், அந்த மேம்பாலம் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் அரசால் கட்டப்பட்டாதாகும்.
இந்த விளம்பரம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “முதலில் வேலைவாய்ப்புக் குறித்து பொய்யான விளம்பரத்தை அளித்து உ.பி. பாஜக அரசு சிக்கியது, இப்போது, அவர்களின் விளம்பரத்தில் பொய்யான மேம்பாலம், தொழிற்சாலை புகைப்படங்களை வெளியிட்டது அம்பலமாகியுள்ளது.
பாஜகவின் பொய்யான கூற்றுக்களின் உண்மைகளை உத்தரப்பிரதேச மக்கள் பார்த்து வருகிறார்கள். முதல்வரையும், பாஜக அரசையும் தேர்தலில் மக்கள் மாற்றுவார்கள். உ.பி. அரசு மக்களின் பிரச்சினைகளையும் புரிந்து கொள்ளவில்லை, அவர்கள் மீது அக்கறையும் இல்லை. பொய்யான விளம்பரங்களை வெளியி்ட்டு உரிமை கொண்டாடுகிறது யோகி அரசு ” எனத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் உத்தரப்பிரதேச அரசு மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த நாளேட்டின் ஆன்-லைனில் இந்தப் பாலத்தின் புகைப்படங்கள் நீக்கப்பட்டன. அந்த நாளேடு அளித்த விளக்கத்தில் “உத்தரப்பிரதேச அரசின் விளம்பரத்துக்காக எங்களின் விளம்பரத்துறை தவறான புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. தவறுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம். அனைத்து டிஜிட்டல் பதிப்பிலும் இந்தப் புகைப்படம் நீக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.