Published : 13 Sep 2021 03:13 AM
Last Updated : 13 Sep 2021 03:13 AM

இந்திரா காந்தி தகுதிநீக்க தீர்ப்பு துணிச்சலானது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கருத்து

பிரயாக்ராஜ்

இந்திரா காந்தி தகுதிநீக்க தீர்ப்பு துணிச்சலானது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச தேசிய சட்ட பல்கலைக்கழகம், அலகாபாத் உயர் நீதிமன்ற புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா பிரயாக்ராஜ் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேசியதாவது:

கும்பமேளா நகரில் கால் பதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அறிவு, ஞானம், நீதியின் பிறப்பிடமாக பிரயாக்ராஜ் விளங்குகிறது. இந்த நகரில் இருந்து 5 பிரதமர்கள், 5 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் உருவாகி உள்ளனர். அலகாபாத் உயர் நீதிமன்றம் 150 ஆண்டுகள் வரலாறு கொண்டது. இந்திய சுதந்திர போராட்டத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற பார் கவுன்சில் முக்கிய பங்கு வகித்தது.

கடந்த 1975-ம் ஆண்டில் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை தகுதி நீக்கம் செய்து அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா வழங்கிய தீர்ப்பு ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இந்த தீர்ப்பு மிகவும் துணிச்சலானது. இதைத் தொடர்ந்து அவசர நிலை அமல் செய்யப்பட்டது. இதனால் ஏற்பட்ட பின்விளைவுகளை இப்போது விவரிக்க விரும்பவில்லை.

வழக்குகள் தேக்கம்

நீதித் துறை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். அப்போதுதான் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்க முடியும். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏராளமான குற்றவியல் வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. இந்த பிரச்சினைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றமும் பார் கவுன்சிலும் இணைந்து தீர்வு காண வேண்டும்.

ஆங்கிலேயர் வெளியேறிய பிறகு நீதிமன்றங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பது உண்மை. நாடுமுழுவதும் நீதிமன்ற கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். அப்போதுதான் நீதிமன்ற பணி சூழல் நிறைவாக அமையும்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வழக்கறிஞர் என்பதால் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நன்கு உணர்ந்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட வேண்டும் என்பது அவரது விருப்பம். அவரது கனது தற்போது நனவாகியுள்ளது.

இவ்வாறு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசினார்.

இந்திரா வழக்கு பின்னணி..

கடந்த 1971-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். அவரது தேர்தல் முகவராக செயல்பட்ட யஷ்பால் கபூர் அரசு ஊழியர் ஆவார். தேர்தல் பணிக்காக அரசு ஊழியரை இந்திரா காந்தி பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டி அவரிடம் தோல்வியடைந்த ராஜ் நாராயண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா, கடந்த 1975 ஜூன் 12-ம் தேதி இந்திரா காந்தி குற்றவாளி, அவரது தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு மிகவும் துணிச்சலானது என்று தலைமை நீதிபதி ரமணா குறிப்பிட்டுள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x