

டெல்லி எல்லையில் மழை வெள்ளம் சூழ்ந்த சாலையில், விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிகைத் நேற்று போராட்டம் நடத்தினார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பாரதிய கிஸான் சங்கத் (பிகேயு) தலைவர் ராகேஷ் டிகைத் தலைமையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசும் - விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், டெல்லி - என்சிஆர் சாலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்தது. கடந்த சனிக்கிழமை பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இந்நிலையில், டெல்லி - உத்தர பிரதேச மாநில எல்லை காஸிப்பூர் பகுதியில் இடுப்பளவு மழை வெள்ளத்தில் பிகேயு சங்கத் தலைவர் ராகேஷ் டிகைத் தனது ஆதரவாளர்களுடன் நேற்று போராட்டத்தில் பங்கேற்றார். கனமழையால் விவசாயிகள் அமைத்திருந்த கூடாரங்கள், தற்காலிக தங்குமிடங்கள் சேதம் அடைந்துள்ளன.
இதுகுறித்து பிகேயு சங்க ஊடக பொறுப்பாளர் தர்மேந்திரா மாலிக் கூறும்போது, ‘‘சாலையில் வெள்ளம் சூழ்ந்திருந்தாலும், ராகேஷ் டிகைத் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார். மழை வெள்ளத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறினோம். அதை அதிகாரிகள் பொருட்படுத்த வில்லை. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் போராட்டம் நடத்த தொடங்கி தற்போது குளிர்காலம், வெயில் காலம், மழைக்காலம் என்று 3 பருவ நிலைகளையும் சந்தித் துவிட்டோம். அதனால், எதை கண்டும் விவசாயிகள் இனி அஞ்சமாட்டார்கள்’’ என்று தெரிவித்தார்.