

கடந்த ஒரு வாரமாக பெங்களூருவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 300-க்கும் கீழே குறைந்துள்ளது. ஆனால் டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் அதிகரித்திருப்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவில் கடந்த மே மாதத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 677 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவல் கடந்த 3 மாதங்களில் 6 மடங்கு அதிகரித்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி தலைமை சுகாதார அலுவலர் விஜேந்திரா கூறியதாவது:
பொதுவாக மழைக் காலங்களில் டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் அதிகரிக்கும். இந்த முறை சற்று கூடுதலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மே மாதத்தில் இருந்து தற்போது வரை 12,203 பேருக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,304 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மாநகராட்சிக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் அதே வேளையில், சுற்றுப்புற சுகாதாரத்தையும் மேம்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இவ்வாறு தலைமை சுகாதார அலுவலர் விஜேந்திரா கூறினார்.