Published : 12 Sep 2021 03:18 AM
Last Updated : 12 Sep 2021 03:18 AM

தாக்குதல் நடத்தும் சதியுடன் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி செய்த குற்றத்துக்காக பாகிஸ்தான் தீவிரவாதிக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்தவர் முகமது ஆமிர். இவர் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர்இந்தியாவின் பல்வேறு இடங்களில் குண்டு வைத்து தாக்குதல் நடத்தச் சதி செய்ததாக தேசியபுலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளால் 2017-ல் கைதுசெய்யப்பட்டார்.

பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டி வந்து தாக்குதல் சதி செய்ய முயன்றபோது ஜம்மு-காஷ்மீரின் மகம் பகுதியில் இவரை போலீஸார் சிறை பிடித்தனர்.

இவர் மீது சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை, ஆயுதங்கள் கையாளுதல், எல்லையைக் கடந்து வந்து தாக்குதல் நடத்த சதி செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் என்ஐஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். 2018-ல் இவர் மீது என்ஐஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்திலுள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, இவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையை அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x