Published : 12 Sep 2021 03:18 AM
Last Updated : 12 Sep 2021 03:18 AM

கரோனா பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வளர்ந்து வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதுடெல்லி

கரோனா பாதிப்பிலிருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டு மிகவும் வலுவாக வளர்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார்தாம் பவன் அரங்கை காணொலி வாயிலாக திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:

உலக நாடுகள் அனைத்திலும் கரோனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய சூழ்நிலையில் இந்தியாவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில்தான் உற்பத்தி சார்ந்த ஊக்க சலுகை (பிஎல்ஐ) அறிமுகம் செய்யப்பட்டது. இது பல்வேறு புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது.

தற்போது இந்த சலுகை ஜவுளித் தொழிலுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இதனால் சூரத் உள்ளிட்ட ஜவுளித் தொழில் நிறைந்த நகரங்கள் அதிகபட்ச பலனை அடைய முடியும்.

இந்தியாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்திய ஆய்வில் இந்தியப் பொருளாதாரம் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் 20.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் எட்டப்பட்ட வளர்ச்சியை விட அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 24.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

10 துறைகளுக்கு சலுகை

உற்பத்தி சார்ந்த ஊக்க சலுகை 10 துறைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜவுளி, ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழிலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கரோனா பாதிப்பிற்குப் பிறகு இத்துறைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டி வருகின்றன.

21-ம் நூற்றாண்டில் இந்தியா மிகவும் வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக சர்வதேச அரங்கில் திகழ்கிறது. வாய்ப்புகளுக்கு இங்கு எந்த சூழலிலும் பஞ்சம் ஏற்பட்டதில்லை. இவ்வாறு பிரதமர் பேசினார்.

வேலை வாய்ப்பை எதிர்நோக்குவோருக்கு பயிற்சி அளிப்பதற்காக சர்தர்தாம் பவன் அரங்கம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x