

தொடர்பு மொழியாக இந்தி மொழியை பயன்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற அறிவிப்பை வைத்து சர்ச்சை செய்வது தேவையற்றது என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், இந்த ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி அன்றும், மே மாதம் 27 ஆம் தேதி அன்றும் அனுப்பிய சுற்று அறிக்கைகளில், இணையதளம், முகநூல், ட்விட்டர், மின் அஞ்சல், உன்குழாய் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், தற்போது ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருவதால், இனிமேல் இந்தி மொழியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்கே முதல் இடம் தர வேண்டும் என்றும் அறிவித்திருந்தது.
இது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில்: "தொடர்பு மொழி சர்ச்சை தேவையற்றது. அரசின் நடவடிக்கை அனைத்து மொழிகளையும் மேம்படுத்தவே எடுக்கப்படுகிறது. நாட்டு மக்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் பேச அனைத்து உரிமையும் இருக்கிறது. அனைத்து இந்திய மொழிகளுக்கும் அரசியல் சாசனத்தில் ஒரே மாதிரியான முக்கியத்துவமே அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தில் ஒரு குறிப்பிட்ட மொழிக்கு மட்டும் கூடுதல் அந்தஸ்து அளிக்க அதிகாரம் இல்லை" இவ்வாறு அவர் கூறினார்.