

டெல்லியில் ஒரே மாதத்தில் 38.3 செ.மீ மழை பெய்துள்ளது. கடந்த 1944 ஆம் ஆண்டுக்கான பிறகு முதன்முறையாக இந்த அளவுக்கு மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடைசியாக கடந்த 1944 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஒரே நாளில் 417.3 மி.மீ மழை பெய்தது. இந்நிலையில் அதன் பிறகு செப்டம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி பதிவான 383.4 மி.மீ மழை தான் ஒரு மாதத்துக்கான அதிகமான மழையளவு.
கனமழை காரணமாக டெல்லி இந்திராகாந்தி விமான நிலைய வளாகம் வெள்ளக்காடாக மாறியது. விமானங்களை நிறுத்தி வைத்திருந்த பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. மோசமான வானிலை காரணமாக விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் நாளை (ஞாயிறு) காலை வரை மழை தொடரும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானின் கிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாலும் வங்கக் கடலில் புதிதாக இன்னொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளாதாலுமே டெல்லியில் கனமழை பெய்துள்ளதாக ஐஎம் டி மூத்த விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி தெரிவித்தார்.
டெல்லியைப் போல் பஞ்சாப், ராஜஸ்தானிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.