Published : 10 Sep 2021 05:57 AM
Last Updated : 10 Sep 2021 05:57 AM

மனைவி கொடுமையால் 21 கிலோ எடை குறைந்த கணவர்: விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு

சண்டிகர்

ஹரியாணா மாநிலம் ஹிஷார் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.கேட்கும் திறன் குறைபாடு கொண்ட கணவர், காது கேட்கும் கருவியை பயன்படுத்தி வருகிறார். மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “வசதியான குடும்பத்தைச் சேர்ந்த எனது மனைவி, குடும்ப உறவினர்கள் முன்னிலையில் சிறிய விஷயங்களுக்கு சண்டையிட்டு அவமானப்படுத்தி, மனரீதியாக கொடுமைப்படுத்தினார்.அதனால் 21 கிலோ எடை குறைந்துவிட்டேன்’’ என்று கணவர் கூறியிருந்தார்.

இதை ஏற்று கணவருக்கு விவாகரத்து வழங்கி குடும்ப நல நீதிமன்றம் கடந்த 2019 ஆகஸ்ட் 27-ம் தேதி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து பஞ்சாப் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மனைவி மேல்முறையீடு செய்தார். அதில், கணவர் குடும்பத்தார் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறியிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் கணவர் கூறியதுதான் உண்மை என்றும் அவரை மனைவி மனரீதியாக கொடுமைப் படுத்தியது மட்டுமின்றி கணவர் குடும்பத்தார் மீது கூறிய புகார்கள் பொய்யானவை என்றும் தெரிய வந்தது. மனைவியின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் கணவருக்கு விவாகரத்து வழங்கி குடும்ப நல நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x