

மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திட்டங்கள் தொடர்பான மாநில முதல்வர்கள் மாநாடு, காணொளி வாயிலாக நடைபெற்றது.
இதில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்பேசும்போது, “5.5 கோடி விவசாயிகள் கொண்ட ஒரு தரவுத்தளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதனை வரும் டிசம்பருக்குள் 8 கோடியாக உயர்த்தவுள்ளது. இதற்கு மாநில அரசுகள் உதவ வேண்டும். விவசாயிகள் குறித்த மத்திய அரசின் தரவுத்தளத்தை பயன்படுத்தி மாநிலங்கள் தங்களின் சொந்த தரவுத்தளத்தை உருவாக்க வேண்டும். இதனுடன் மாநில நிலப்பதிவு தரவுகள் இணைக்கப்படுவதை அனுமதிக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து மத்திய வேளாண்அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளின் தரவுத்தளம் குறித்து மாநாட்டில் விளக்கப்பட்டது. பிஎம்-கிசான்,மண்வள அட்டை, பிஎம் ஃபஸல்பீமா யோஜனா போன்ற திட்டங்களில் உள்ள புள்ளிவிவரங்கள் மூலம் விவசாயிகளுக்கான தேசியதரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு உருவாக்கியுள்ள தரவுத்தளத்தை அனைத்து மாநிலங்களும் ஆராய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.