Published : 09 Sep 2021 03:13 AM
Last Updated : 09 Sep 2021 03:13 AM

கேரளாவில் புத்தகங்களை பரிமாறிக்கொள்ளும் கிராமம்

பெரும்குளம் கிராமத்தின் தெருவில் வைக்கப்பட்டுள்ள புத்தக அலமாரியிலிருந்து புத்தகத்தை எடுக்கும் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர்.

திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் புத்தக கிராமம் என்ற பெயரை பெரும்குளம் என்ற கிராமம் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக கேரள மாநில சுற்றுலாத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் புத்தக கிராமம் தொடர்பான தகவல்கள், வீடியோக்களையும் கேரள சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது. இந்த ட்விட்டர் பக்கத்தை பெரும்பாலான மக்கள் ரசித்து லைக் போட்டுள்ளனர். மேலும் அதில் வெளியிட்டுள்ள வீடியோவையும் அவர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது பெரும்குளம் கிராமம். இதை கிராம மக்கள் புத்தக கிராமம் என்றும், மலையாளத்தில் புஸ்தக கூடு என்று அழைக்கின்றனர். கிராமத்தின் தெருக்களில் ஆங்காங்கே கூடுகள் போன்று மரத்தால் செய்யப்பட்ட அலமாரிகள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. கிராம மக்கள் தங்களுக்குத் தேவையான புத்கங்களை அங்கிருந்து எடுத்துக் கொள்கின்றனர். படித்து முடித்த பின்னரோ அல்லது தேவை தீர்ந்த பின்னரோ புத்தகத்தை மீண்டும் அங்கேயே வைத்து விடுகின்றனர். இந்தச் சேவையை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற நோக்கில் இந்த புத்தக கிராமத் திட்டத்தை மக்கள் தொடங்கியுள்ளனர். கடந்தஜூன் 19-ம் தேதி, தேசிய படிக்கும் தினத்தையொட்டி இந்த கிராமத்தை புத்தக கிராமம் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள ஒரு நகரத்தில் சிறிய இலவச நூலகம் நடத்துவதைக் கேள்விப்பட்டு அதைப் போலவே இங்கு இந்தத் திட்டத்தை கிராம மக்கள் கொண்டு வந்துள்ளனர். கிராமம் முழுவதும் 11 இடங்களில் புத்தக அலமாரி வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன. இதில்600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x