

அசாமில் பிரம்மபுத்திரா நதியில் இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பலர் மாயமாகினர். 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரம்மபுத்திரா நதியில் உள்ள சிறிய தீவுப் பகுதியான மஜூலியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் படகு ஒன்று நிமதி ஹட் பகுதியை நோக்கி நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு பயணிகள் படகு மீது சற்றும் எதிர்பாராத விதமாக அரசுப் படகு வேகமாக மோதியது. அந்தப் படகிலும் சுமார் 60 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் இரண்டு படகுகளும் ஆற்றில் கவிழ்ந்ததில், அவற்றில் இருந்த பயணிகள் நீரில் தத்தளித்தனர். தண்ணீரில் மூழ்காமல் இருப்பதற்காக சிலர் படகுகளை கெட்டியாக பிடித்துக் கொண்டனர். பலர் ஆற்றில் நீச்சலடித்து கரைக்கு வர முயன்றனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒரு குழந்தை உட்பட 40 பேர் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து பணியாற்றுமாறு ஜோர் ஹாட் மாவட்ட நிர்வாகத்தினருக்கு அசாம் முதல்வர் ஹிமந்த் விஸ்வ சர்மா உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநர்களின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா அல்லது மோசமான வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அமித் ஷா ஆலோசனை
இதனிடையே, அசாம் முதல்வர் ஹிமந்த் விஸ்வ சர்மாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்புகொண்டு விபத்து குறித்து கேட்டறிந்ததாக தெரிகிறது. அப்போது, மீட்புப் பணியில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக அமித் ஷா தெரிவித்ததாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த பகுதியை முதல்வர் இன்று பார்வையிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சரும், அசாம் முன்னாள் முதல்வருமான சர்வானந்தா சோனாவல், “பிரம்மபுத்திரா படகு விபத்தில் காணாமல் போனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு எனது துறையினருக்கு உத்தர விட்டுள்ளேன். மீட்புப் பணியில் எக்காரணத்தை கொண்டும் இதில் சுணக்கம் ஏற்படாது’’ என தெரிவித்துள்ளார்.