

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக எம்.பி. வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இது மாநிலத்தில் வன்முறை குறையவில்லை என்பதையே காட்டுகிறது என்று ஆளுநர் ஜக்தீப் தன்கர் கவலை தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து கடந்த மே 2-ம் தேதி முடிவுகள் வெளியாயின. அதில், பெரும்பான்மை பெற்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அதன்பின் மாநிலத்தின் பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. திரிணமூல் கட்சியை எதிர்த்து தேர்தலில் வேலை செய்தவர்கள், போட்டியிட்டவர்கள், பிரச்சாரம் செய்தவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து விசாரணை பெற்று வருகிறது.
இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் 24 பர்கானாஸ் மாவட்டம் ஜகத்தல் என்ற இடத்தில் உள்ள பாஜக எம்.பி. அர்ஜுன் சிங் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகள் நேற்று அதிகாலை வீசப்பட்டன. அந்த நேரத்தில் எம்.பி. டெல்லியில் இருந்தார். மேலும், அவரது குடும்பத்தினர் வீட்டுக்குள் இருந்ததால் யாருக்கும் காயம் இல்லை. தகவல் அறிந்து போலீஸார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர்.
எம்.பி. அர்ஜுன் சிங் வீட்டுக்குசிஆர்பிஎப் வீரர்கள் சிலர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். எனினும் மர்ம நபர்கள் 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திலீப் கோஷ்
இதுகுறித்து மேற்குவங்க மாநிலபாஜக தலைவர் திலீப் கோஷ் கூறும்போது, ‘‘எம்.பி. வீட்டில் வெடிகுண்டு வீசியவர்கள் திரிணமூல்கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கலாம்’’ என்று கூறினர்.
ஆளுநர் ஜக்தீப் தன்கர் கூறும்போது, ‘‘எம்.பி. வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம், மாநிலத்தில் வன்முறைகள் குறையவில்லை என்பதையே காட்டுகிறது. இது கவலை அளிக்கிறது’’ என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, ‘‘குண்டுகள் வீசியவர்கள் மீது மாநில போலீஸார் தகுந்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். தவிர எம்.பி. அர்ஜுன் சிங் பாதுகாப் புக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து ஏற்கெனவே முதல்வர் மம்தா பானர்ஜியிடமும் தெரிவிக்கப் பட்டுள்ளது’’ என்று கூறினார்.
எம்.பி. அர்ஜுன் சிங் கடந்த 2019-ம் ஆண்டு திரிணமூல் கட்சியில் இருந்து விலகி பாஜக.வில் இணைந்தார். அதன்பின் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யானார் என்பது குறிப்பிடத் தக்கது.-பிடிஐ