Published : 09 Sep 2021 03:14 AM
Last Updated : 09 Sep 2021 03:14 AM

ஏழுமலையான், உற்சவர்களுக்கு பயன்படுத்திய மலர் மாலைகளில் ஊதுபத்திகள் தயாரிப்பு: 13-ம் தேதி முதல் பக்தர்களுக்கு விற்பனை தொடக்கம்

திருப்பதி தேவஸ்தான கோயில்களில் உபயோகப்படுத்தப்பட்ட மலர் மாலைகளில் உள்ள பூக்கள் தரம் பிரிக்கப்படுகின்றன.

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட திருப்பதியில் உள்ள அனைத்து பிற தேவஸ்தான கோயில்களில் சுவாமிகளுக்கு செலுத்தப்படும் மலர் மாலைகளில் வாசனை ஊதுபத்திகள் தயாரிக்கப்படுகின்றன.இவை விதவிதமான மனம் கவரும் வாசனைகளில் வரும் 13-ம் தேதி முதல் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் விதவிதமான மலர்மாலைகள் தினமும் அணிவிக்கப்பட்டுகிறது. விசேஷ நாட்களில் வெளி நாட்டிலிருந்தும் மலர்கள் வரவழைக்கப்பட்டு அவைகளும் உபயோகப்படுத்தப்படுகிறது. சுவாமியின் மீது அலங்கரிக்கப்பட்ட பின்னர், அவை திருமலையில் உள்ள சில நீர் நிலைகளில் போடப்பட்டு வந்தது. ஆனால், இந்த வாசனை மிக்க மலர் மாலைகள் மூலம் மிகவும் வாசனையான ஊதுபத்திகளை தயாரிக்க திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்தது. அதன் பின்னர், ஊதுபத்தி தயாரித்து கொடுக்க பெங்களூரு தர்ஷன் இண்டர்நேஷனல் நிறுவனம் முன்வந்தது. மிக குறைந்த விலைக்கு தரமான ஊதுபத்திகளை தயார் செய்ய வேண்டுமென தேவஸ்தானம் கோரிக்கை விடுத்தது. அதன்பேரில், திருப்பதியில் உள்ள கோசாலையில் இதற்கான பணிகள் தொடங்கியது.

தோட்டக் கலைத் துறை..

ஏழுமலையானுக்கு சூட்டிய மலர் மாலைகள் உட்பட திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அனைத்து கோயில்களில் இருந்தும் சுவாமிகளுக்கு சூட்டப்பட்ட மலர் மாலைகளை தேவஸ்தான தோட்டக் கலைத் துறையினர் தினமும் சேகரித்து, கோசாலையில் உள்ள ஊதுபத்தி நிறுவனத்திடம் ஒப்படைக்கின்றனர். இங்கு, மலர்கள் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது. அதன் பின்னர் இயந்திரம் மூலம் அவைகளை உலர வைக்கின்றனர். பின்னர் இவை பொடியாக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த பொடியுடன் சில ரசாயனங்கள் கலக்கப்பட்டு ஊதுபத்தி தயாரிக்கப்படுகிறது. இவை 15 முதல் 16 மணி நேரம் வரை இயந்திரத்தில் உலர வைக்கப்படுகிறது. அதன் பின்னர் மற்றொரு இயந்திரம் மூலம் விதவிதமான வாசனைகள் அந்த ஊதுபத்திக்கு ஏற்றப்படுகிறது. அதன் பின்னர் கடைசியாக மீண்டும் ஒரு முறை உலர வைத்துவிட்டு, இறுதியில் அட்டைப்பெட்டிகளில் ஊதுபத்திகள் அடைக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்படுகிறது.

இந்த ஊதுபத்திகள் அபயஹஸ்தா, தந்தனாநா, திவ்ய பாதா, ஆக்ருஸ்தி, ஸ்ருஷ்டி, துஷ்டி, திருஷ்டி என 7 வாசனைகளில் தயாரிக்கப்படுகிறது. ஏழுமலையானின் இந்த 7 வாசனை ஊதுபத்திகள் வரும் 13-ம் தேதி முதல் சோதனைஓட்டமாக திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோயில்களில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x