

கரோனா பரவல் காரணமாக, திருப்பதி ஏழுமலையானை சர்வ தரிசனம் முறையில் தரிசிப்பதை தேவஸ்தானம் நிறுத்தி வைத்தது. ரூ.300 ஆன்லைன் டிக்கெட், விஐபி பிரேக், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட், திருக்கல்யாணம் ஆன்லைன் டிக்கெட் ஆகிய ஏதேனும் ஒன்றில் மட்டுமே பக்தர்கள் சுவாமியை தரிசித்து வந்தனர்.
இந்நிலையில் பக்தர்கள் நேர்த்திக் கடன்களை செய்ய முடியாமல் தவித்தனர். இது தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகளிடம் பலர் முறையிட்டனர். இந்நிலையில் சுமார் 4 மாதங்களுக்கு பிறகு திருப்பதியில் பக்தர்கள் தங்கும் ‘நிவாசம்’ விடுதி அருகே நேற்று காலை 6 மணிக்கு சர்வ தரிசன டோக்கன் விநியோகம் தொடங்கியது. முன்னதாக உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் அங்கு ஆதார் அட்டையுடன் டோக்கன் பெற காத்திருந்தனர். இந்நிலையில் வெறும் 2 மணி நேரத்துக்குள் 2 ஆயிரம் டோக்கன்களும் வழங்கப்பட்டு விட்டதால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் சர்வ தரிசன டோக்கன்களையும் ஆன்லைனிலேயே வழங்க பக்தர்கள் பலர் நேற்று கோரிக்கை விடுத்தனர்.