

12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி அசாம் மாநிலம் குவாஹாட்டி யில் நேற்று தொடங்கியது. இந்திரா காந்தி தடகள மைதானத்தில் நடை பெற்ற தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக போட்டியில் இடம்பெறும் வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
தெற்காசிய விளையாட்டு போட்டி யில் சார்க் அமைப்பில் உள்ள இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய 8 நாடுகளை சேர்ந்த 2,672 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். தொடக்க விழாவை யொட்டி 8 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
தொடர்ந்து பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அஸாம் முதல்வர் தருண் கோகாய் கலந்து கொண்டார். இதன் பின்னர் போட்டிக் கான ஜோதி ஓட்டத்தை இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ககன்நரங் தொடங்கி வைத்தார். முன்னாள் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், கால்பந்து அணியின் முன் னாள் கேப்டன் பாய்ச்சங் பூட்டியா உள்ளிட்டோர் ஜோதியை அடுத்தடுத்து பெற்றனர். முடிவில் கோலாகலமாக தெற்காசிய விளையாட்டு போட்டி தொடங்கியது.
2012-ம் ஆண்டு நடைபெற வேண்டிய இந்த தெற்காசிய விளை யாட்டு போட்டிகள் பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப் பட்டு 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடத்தப்படுகிறது. தெற்காசிய விளை யாட்டு போட்டி இந்தியாவில் நடை பெறுவது இது 3-வது முறையாகும்.
டாக்காவில் கடந்த 2010-ல் நடை பெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 90 தங்கத்துடன் மொத்தம் 175 பதக்கங்களை பெற்று முதலிடம் பிடித்திருந்தது. இதுவரை நடைபெற்ற 11 போட்டிகளிலும் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.
இந்த முறை 23 விளையாட்டுகளில் 228 பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. மொத்தம் 228 தங்க பதக்கங்கள், 228 வெள்ளி பதக்கங்கள், 308 வெண்கல பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. வரும் 16-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 521 பேர் கலந்துகொண்டுள்ளனர். இதில் 245 மகளிரும் அடங்குவர். தடகளம், கூடைப்பந்து, சைக்கிளிங், கால்பந்து, ஹேண்ட்பால், ஹாக்கி, கபடி, கோ-கோ, துப்பாக்கிச் சுடுதல், ஸ்குவாஷ், நீச்சல், டென்னிஸ், டிரையத்லான், வாலிபால், பளுதூக்குதல், மல்யுத்தம் ஆகிய 16 போட்டிகள் குவாஹாட்டியில் 10 மைதானங்களில் நடைபெறுகிறது.
வில்வித்தை, பாட்மின்டன், குத்துச் சண்டை, ஜூடோ, டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, வூசு உள்ளிட்டவை ஷில்லாங்கில் நடைபெறுகிறது. சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் இந்தியாவுக்கு கடந்த ஆண்டைவிட கூடுதலாக பதக்கங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வில்வித்தை, தடகளம், பாட்மின்டன், குத்துச்சண்டை, துப்பாக்கிச்சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம், ஜூடோ, வூசு ஆகிய போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தக்கூடும்.
தொடக்க விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பிரபல பாடகர்களான ஜூபின் ஹார்க், அங்கராக் மகந்தா, நஷித் அப்ரின் ஆகியோர் பாடல்கள் பாடினர். புகழ்பெற்ற ஷில்லாங் இசைக்குழுவினரும் இசை நிகழ்ச்சி நடத்தினர். தெற்காசிய நாடுகளில் ஓடும் 8 நதிகளை மையமாக வைத்து இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.