கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வாட்ச் ரூ.70 லட்சம், கண்ணாடி ரூ.2 லட்சம்: முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வாட்ச் ரூ.70 லட்சம், கண்ணாடி ரூ.2 லட்சம்: முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு
Updated on
1 min read

க‌ர்நாடக முதல்வர் சித்தராமையா அணிந்துள்ள கைக்கடிகாரத்தின் (வாட்ச்) மதிப்பு ரூ.70 லட்சம், கண்ணாடியின் மதிப்பு ரூ. 2 லட்சம் என்று முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவருமான குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

மைசூரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அதகூரு ஹூச்சேகவுடா விஸ்வநாத்தை முதல்வர் சித்தராமையா கடந்த வாரம் சந்தித்தார். அப்போது சித்தராமையா தனது கையில் விலை உயர்ந்த ஹுப்லோட்(Hublot Swiss)கடிகாரத்தை கட்டியிருந்தார். இந்த வாட்ச் குறித்து விசாரிக்குமாறு துபாயில் உள்ள துப்பறியும் நிபுணர்களிடம் கேட்டேன்.

இதையடுத்து துப்பறியும் நிபுணர் அந்த கடிகார நிறுவனத்தின் தலைமையிடத்துக்கு சென்று விசாரித்து, கடிகாரத்தின் தரம், விலை ஆகியவற்றை வீடியோ வாக பதிவு செய்து எனக்கு அனுப்பியுள்ளனர். அதன்படி சித்தராமையா அணிந்துள்ள கைக்கடிகாரத்தின் விலை ரூ. 68 லட்சத்து 56 ஆயிரம். இறக்குமதிக்கான சுங்க வரியுடன் சேர்த்து அதன் மதிப்பு சுமார் ரூ. 70 லட்சம் ஆகும்.

இந்த கடிகாரத்தில் 2 வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் சித்தராமையா சமீப காலமாக அணியும் கண்ணாடியின் விலை ரூ. 2 லட்சம் ஆகும்.

சித்தராமையாவுக்கு இந்த ஆடம்பர வாழ்க்கை தேவையா? வரும் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் மக்கள் இதற்கு தகுந்த பதில் அளிப்பார்கள்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் சித்தராமையா, “என்னுடைய பழைய நண்பர் குமாரசாமி, எப்படிப்பட்டவர் என்று மக்களுக்கு தெரியும். நான் அந்த கைக்கடிகராத்தை விற்க தயாராக இருக்கிறேன். குமாரசாமி அதற்கு ரூ.10 லட்சம் கொடுத்தால் போதும்'' என்றார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in