Last Updated : 08 Sep, 2021 03:15 AM

 

Published : 08 Sep 2021 03:15 AM
Last Updated : 08 Sep 2021 03:15 AM

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் வழங்கியதற்காக லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது அக்.8-க்குள் நடவடிக்கை: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் வழங்கியதற்காக லஞ்சம் பெற்ற‌ அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் அக்டோபர் 8-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, 2017-ம்ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி வரை 4 ஆண்டுகள் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த தண்டனை காலத்தில், சசிகலா சிறையில் சிறப்பு சலுகை பெற்றதாக புகார் எழுந்தது.

இதனை விசாரித்த‌ அப்போ தைய சிறைத்துறை டிஐஜி ரூபா,சசிகலா சிறப்பு சலுகைகளை பெறுவதற்காக டிஜிபி சத்திய நாராயணராவ், சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டினார். 2019-ம் ஆண்டு இதை விசாரித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு, ‘சசிகலா சிறப்பு சலுகைகளை அனுபவித்தது உண்மை' என 245 பக்க அளவில் அறிக்கை அளித்தது.

இதையடுத்து, ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் சத்திய நாராயணராவ், கிருஷ்ணகுமார் மற்றும் ச‌சிகலாவுக்கு நெருக்கமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் 2019-ம் ஆண்டிலே முதல்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட போதும், அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில், சமூக ஆர்வலர் கீதா கடந்த ஜூலை மாதம் இவ்வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல‌ மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதை ஏற்ற நீதிமன்றம், இறுதி குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, ஊழல் தடுப்பு பிரிவு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இவ்வழக்கு நீதிபதிகள் சதீஷ் சந்திர ஷ‌ர்மா, சச்சின் சங்கர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கீதா தரப்பில், ‘சசிகலா மற்றும் இளவரசிக்கு சிறையில் சிறப்பு சலுகை வழங்கியதற்காக டிஜிபி சத்திய நாராயணராவ், சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் மீது ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை' என வாதிடப்பட்டது.

அதற்கு ஊழல் தடுப்பு பிரிவு தரப்பு, ‘சத்திய நாராயண ராவ், கிருஷ்ணகுமார் ஆகிய இருவரும் அரசு ஊழியர்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துறை ரீதியான அனுமதி கோரப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க 2 மாத கால அவகாசம் வழங்க வேண்டும்' என கோரப்பட்டது.

அவகாசம் கேட்பது ஏன்?

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இப்போது மீண்டும் 2 மாத கால அவகாசம் கேட்பது ஏன் என புரியவில்லை. பெங்களூருவில் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் இருக்கும்போது, இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்புத்துறை கால தாமதம் செய்வது ஏன்?

இன்னும் 30 நாட்களுக்குள் (அக்டோபர் 8-ம் தேதிக்குள்) உரிய அனுமதி பெற்று குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான விசாரணை அறிக் கையை வரும் அக்டோபர் 8-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், உள்துறை முதன்மைச் செயலாளர் நீதிமன்றத் தில் நேரில் ஆஜராக நேரிடும்'' என உத்தரவிட்டனர்.

இதையடுத்து வழக்கு வரும் அக்டோபர் 8-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x