Last Updated : 14 Feb, 2016 11:43 AM

 

Published : 14 Feb 2016 11:43 AM
Last Updated : 14 Feb 2016 11:43 AM

ஜே.என்.யு.விவகாரம்: மோடி மீது அரசியல் தலைவர்கள் கடும் விமர்சனம்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சைகளையடுத்து பிரதமர் நரேந்திர மோடி மீது விமர்சனங்கள் பாய்ந்து வருகின்றன.

அரவிந்த் கேஜ்ரிவால் கூறும்போது, எந்த ஒரு தேச விரோத செயல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதையும், அதில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால், ‘மோடி, போலீஸைப் பயன்படுத்தி அனைவரையும் பயமுறுத்தி வருகிறார்’ என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “மோடி அரசும், அகில் பாரதிய வித்யா பரிஷத் அமைப்பும், தங்களது இழுப்புக்கெல்லாம் வரவில்லை என்பதற்காக மதிப்பு மிக்க ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை இழிவு படுத்தி வருவது முற்றிலும் கண்டனத்துக்குரியது” என்று கூறியுள்ளார்.

“அவசரநிலை பிரகடனத்தை விடவும் மோசம்”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, உள்துறை அமைச்சரைச் சந்தித்த பிறகு ஆளும் கட்சி மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

“நிலைமைகள் அவசரநிலை பிரகடன காலக்கட்டத்தை (1975-77) விடவும் ஜே.என்.யூ.வில் மோசமாக உள்ளது. புதிய துணை வேந்தர் தான் பொறுப்பேற்றவுடனேயே வளாகத்துக்குள் போலீஸை வரவழைக்கிறார். துணை வேந்தர்களை மாற்றுகின்றனர், அவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு எதை வேண்டுமானாலும் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இது ஹைதராபாத் பல்கலைக் கழகமாயிருந்தாலும், ஜே.என்.யூ.வாக இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டங்கள் திணிக்கப்படுகின்றன.

ஜே.என்.யூ.வை தொடர்ந்து தேச விரோத சக்தி என்றே முத்திரை குத்துகின்றனர். யாரும் இதனை நம்பப்போவதில்லை. இந்தியாவின் அயலுறவு செயலர், மற்றும் முன்னாள் ஐபி தலைவர் ஆகியோர் ஜே.என்.யூ முன்னாள் மாணவர்களே. பல ஐஏஎஸ்., ஐபிஎஸ் அதிகாரிகளும் ஜே.என்.யூ.வில் படித்தவர்களே” என்று கூறினார்.

ஏற்கெனவே நாடாளுமன்ற அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற ஒரு மதிப்புமிக்க கல்வி நிறுவனத்தில் ஏன் இத்தகைய விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இதனை இரு கட்சிகள் மட்டுமல்ல நாடே சிந்திக்க வேண்டிய விஷயம் என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x