Last Updated : 10 Feb, 2016 08:59 AM

 

Published : 10 Feb 2016 08:59 AM
Last Updated : 10 Feb 2016 08:59 AM

பெற்றோர் என நம்பவைத்தும், போலி ஆவணங்கள் மூலமும் 32 குழந்தைகளை அமெரிக்காவுக்கு கடத்திய 16 பேர் கைது: பெங்களூரு தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை

பெங்களூருவில் போலி பெற்றோர் மற்றும் ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக 32 குழந்தைகளை அமெரிக்காவுக்கு அனுப்பிய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு சென்ற குழந்தை களின் நிலை குறித்து பெங்களூரு தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பெங்களூரு மாநகர காவல் கூடுதல் ஆணையர் ஹரிசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒரு கும்பல் போலி ஆவணங்கள் தயாரித்து குழந்தைகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து எனது தலைமையில் 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பாஸ்போர்ட் அலுவலகம், சென்னையில் உள்ள அமெரிக்க மண்டல பதிவு அலுவலகம் உட்பட பல இடங்களில் கடந்த 10 மாதங்களாக விசாரணை நடத்தினோம்.

இதில், உத்திரப் பிரதேசம், பிஹார், மகாராஷ்டிரா, குஜ‌ராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 10 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் பெங்களூருவுக்கு தரகர்கள் மூலம் கடத்தி வரப்படுவது தெரியவந்தது. பின்னர் பெங்களூருவில் உள்ள ஏழை தம்பதிகள், வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த ஆண்,பெண்களை கணவன் மனைவியாக நடிக்க வைத்து கடத்தி வரப்பட்ட‌ குழந்தைகளுக்கு பெற்றோர் போல நடிக்க வைக்கின்றனர்.

இதையடுத்து, தரகர்கள் மூலம் அந்த குழந்தைகளின் பெயரில் குடும்ப அட்டை, வாடகை வீட்டு ஆவணம், வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களை தயாரிக்கின்றனர். இந்த போலி ஆவணங்களை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு அனுப்பி, விசா பெற்று குழந்தைகளை போலி பெற்றோருடன் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கின்ற‌னர். போலி பெற்றோர் ஒரு சில நாட்களில் குழந்தையை அங்கே விட்டுவிட்டு இந்தியாவுக்கு திரும்புகின்றனர்.

இத்தகைய சட்டவிரோத செயலில் ஈடுபடும் கும்பலை கண்டறிந்த தனிப்படை போலீஸார் பெங்களூருவில் உள்ள சிவாஜி நகர், ஜெய மஹால், பைரதி, கொத்தனூர், கெத்தலஹள்ளி, ஆர்.டி .நகர் உட்பட 10 இடங்களிலிருந்து 3 பெண்கள் உட்பட 16 பேரை கைது செய்தனர். இந்த கும்பலுக்கு ஜெய மஹால் பகுதியைச் சேர்ந்த உதய் பிரதாப் சிங் ( 44) என்பவர் தலைமை தாங்கி உள்ளார். இவர்கள் 32 குழந்தைகளை அமெரிக்காவுக்கு கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதானவர்களிடம் இருந்து 10-க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட், வயது சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் மடிக்கணினி, செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கும்பல் எதற்காக குழந்தைகளை அமெரிக்காவுக்கு கடத்தினார்கள்? பணத்துக்காக கடத்தப்பட்டார்களா? அமெரிக்காவில் அந்த குழந்தைகளின் தற்போதைய நிலை என்ன என்பதை கண்டறிய தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெங்களூரு தனிப்படை போலீஸார் குழந்தைகள் கடத்தல் குறித்து தெரிவித்துள்ள தகவல் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக மற்றும் மண்டல விசா அலுவலக அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடத்தப்பட்ட குழந்தைகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பெறுவதற்காக பெங்களூருவுக்கு வரப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x