உ.பி.யில் மேலும் ஒரு கொள்ளையன், மாபியா தலைவனுக்கு சிலை

உ.பி.யில் மேலும் ஒரு கொள்ளையன், மாபியா தலைவனுக்கு சிலை
Updated on
2 min read

உத்தரப் பிரதேச மாநிலம், பதேபூர் மாவட்டத்தில் ஹனுமார் கோயில் ஒன்றில் சம்பல் கொள்ளையன் தத்துவாவுக்கு கடந்த வாரம் சிலை வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மற்றொரு கொள்ளையன் நிருபய் குஜ்ஜர், மாபியா கும்பலின் தலைவன் ஸ்ரீபிரகாஷ் சுக்லா ஆகியோருக்கும் சிலை வைக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் சம்பல் கொள்ளையன் நிருபய் குஜ்ஜர், சுமார் 35 ஆண்டுகள் போலீஸாரிடம் பிடிபடாமல் இருந்தவர். ஆனால் சந்தனக் கடத்தல் வீரப்பன் பாணியில் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் ரகசிய இடங்களில் படங்களுடன் பேட்டி அளித்து வந்தார். டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் கொள்ளைக்காரியும் சமாஜ்வாதி கட்சி எம்.பி.யுமான பூலான் தேவியை விட நிருபய் குஜ்ஜர் மூத்தவர். இவரும் பூலான் தேவியை போல் சரணடைந்து அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிட ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் கடந்த 2005-ம் ஆண்டு நவம்பரில் உ.பி. போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். எட்டவா மாவட்டம், பித்தவுலி காவல் எல்லைக்குட்பட்ட ஜஹர்ப்பூர் கிராமத்தில் நிருபய் கட்டிய கோயில் உள்ளது. இதனுள் அவருக்கும் சிலை வைத்து மாபெரும் விழா நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எட்டவாவில் இருக்கும் நிருபய் குஜ்ஜரின் சகோதரி மகன் சரண்சிங் குஜ்ஜர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இவர் மற்றவருக்கு கொள்ளையனாக இருக்கலாம். ஆனால் இப்பகுதி வாசிகளுக்கு கடவுள் போன்றவர். இங்குள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு நிருபய் பல்வேறு சூழலில் நிதி மற்றும் பாதுகாப்பு அளித்துள்ளார். இதனால் அவர் மீது இங்குள்ள மக்களிடையே அதிக மதிப்பு, மரியாதை நிலவுகிறது. இதை அறிந்தே எட்டவா மாவட்ட நிர்வாகம் சிலை வைக்க எதிர்ப்பு காட்டாமல் உள்ளது” என்றார்.

உ.பி.யின் மாபியா கும்பல் தலைவனான விளங்கியவர் ஸ்ரீபிரகாஷ் சுக்லா. கிழக்கு உ.பி.யின் கோரக்பூர் மாவட்டம், மாம்கோர் என்ற கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு, வட இந்தியாவின் பல்வேறு மாபியா கும்பல் மற்றும் நிழல் உலக தாதாக்களுடன் மோதல் ஏற்பட்டது. இதில் பலரை சுட்டுக் கொன்றுவிட்டு ஹாங்காங் தப்பிச் சென்ற சுக்லா அங்கிருந்தவாறே உ.பி.யில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுக்லா, கடந்த 1998, செப்டம்பரில் காஸியாபாத்தில் உ.பி. போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிராமண சமூகத்தைச் சேர்ந்த சுக்லாவுக்கு தத்துவாவின் சிலை அமைந்த கப்ரஹா கிராமத்துக்கு அருகில், கோன் என்ற கிராமத்தில் உள்ள பரசுராமர் கோயிலுக்கு அருகில் சிலை வைக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிராமிண் சேத்னா சமிதி என்ற அமைப்பு இதற்கான முடிவை எடுத்தது. இம்முடிவை சமிதியின் காப்பாளரும் பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம்எல்ஏ.வுமான ஆதித்யா பாண்டே நேற்று முன்தினம் அறிவித்தார்.

“பிராமண சமூகத்தின் காவலராக விளங்கிய ஸ்ரீபிரகாஷ் சுக்லாவுக்கு அக்ஷய் தீர்த் அன்று சிலை வைக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

‘உ.பி. வீரப்பன்’ என்று அழைக்கப்படும் சம்பல் கொள்ளையன் தத்துவா எனும் சிவக்குமார் பட்டேலுக்கு கடந்த 14-ம் தேதி சிலை வைக்கப்பட்டது. முதலில் அனுமதி மறுத்த மாவட்ட நிர்வாகம், எதிர்வரும் தேர்தலை கருத்தில் கொண்டு பின்னர் எதிர்ப்பை கைவிட்டது. இந்த சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தற்போது மேலும் இரு சிலை வைக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in