வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன்; மெகபூபா முப்தி கவலை; ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை: போலீஸார் தகவல்

பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி | கோப்புப்படம்
பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி | கோப்புப்படம்
Updated on
1 min read

நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

ஆனால், ஜம்மு காஷ்மீரில் எந்தவிதமான பதற்றமான சூழலும் இல்லை, இயல்பாக இருக்கிறது. சூழலைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிபி கட்சியின் தலைவர் முப்தி முகமது ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களின் உரிமைகள் குறித்து மத்திய அரசு கவலைப்படுகிறது. ஆனால், காஷ்மீர் மக்களின் உரிமைகளை வேண்டுமென்றே மறுக்கிறது.

நான் இன்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். காஷ்மீர் நிர்வாகத்தின் கருத்துப்படி காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை. இயல்புநிலை இருப்பதாக கூறும் அவர்களின் போலித்தனத்தை வெளிக்காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாதத் தலைவர் சயத் அலி கிலானியின் இறுதிச் சடங்கு குறித்து மெகபூபா முப்தி ட்விட்டரில் மத்திய அரசைச் சாடியிருந்தார். அதில், “மறைந்த ஒரு நபரின் இறுதிச்சடங்கை நடத்த குடும்ப உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் இங்கு குடும்ப உறுப்பினர்கள் இறுதிச்சடங்கை நடத்த அரசு அனுமதிக்கவில்லை.

குறிப்பாக கிலானியின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கப்பட்டு, குறிப்பாகப் பெண்கள் தாக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தியா மிகப்பெரிய தேசம், இது அதன் கலாச்சாரத்துக்கு எதிரானது. இந்தியாவில் உள்ள ஜனநாயகத்துக்காக உலக அளவில் நாம் மதிக்கப்படுகிறோம். ஜனநாயகத்தில் ஒவ்வொருவரும் தங்களின் கருத்தை முன்வைக்க உரிமை இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஜம்மு காஷ்மீரில் எந்த அசம்பாவிதமும் இல்லை, இயல்பாக இருக்கிறது என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் போலீஸார் தரப்பில் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்டன. குறிப்பாக இன்டர்நெட்டுக்குக் கூட கட்டுப்பாடு இல்லை, ஜம்மு மற்றும் காஷ்மீரில் சூழல் முழுமையாக இயல்புக்கு வந்துவிட்டது. இருப்பினும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிரிவினைவாதத் தலைவர் சயத் அலி ஷா கிலானி மறைந்தவுடன், ஜம்மு காஷ்மீர் முழுவதும் உடனடியாக இணையதள சேவை முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் சூழலைச் சிறப்பாகக் கையாண்டு அமைதியை நிலைநாட்டியதற்காக மத்தியப் படைப் பிரிவுக்கும், ராணுவத்துக்கும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in