

இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே மூதாதையர்களைக் கொண்டவர்கள் என்றால் முஸ்லிம்களை சொந்த குழந்தைகளை போல அல்லாமல் தத்து பிள்ளைகளை போல பாஜகவும், ஆர்எஸ்எஸும் எண்ணுவது ஏன் என விளக்கம் அளிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
புனேவில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
''முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் அடிப்படைவாதத்துக்கு எதிராக, வலிமையாக ஒன்றுதிரள வேண்டும். இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு எந்தவிதமான அச்சமும் இல்லை. இந்துக்கள் எந்த சமூகத்தின் மீதும் விரோத மனப்பான்மையுடனும் இல்லை.
இந்து என்ற வார்த்தை தாய் மண்ணுக்கும், மூதாதையர்களுக்கும், இந்தியக் கலாச்சாரத்துக்கும் சமமானது. எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு இந்தியரும் இந்துதான். அவர்கள் மத்ததால், மொழியால், இனத்தால் வேறுபட்டாலும் அவர்கள் இந்துதான்.
இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே மூதாதையர்களைக் கொண்டவர்கள்தான். அண்டை நாடுகளில் இருந்து படையெடுத்து வந்தவர்கள் மூலம்தான் இஸ்லாம் இந்தியாவுக்குள் வந்தது. இதுதான் வரலாறு.
என மோகன் பாகவத் பேசினார். இந்தநிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மோகன் பாகவத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒரே மூதாதையர்கள் தான் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியிருக்கிறார். அப்படியானால் அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக முஸ்லிம்களை தத்தெடுத்தது போல் நடந்து கொள்வது ஏன். இதுபற்றி ஆர்எஸ்எஸ் தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.