

ஆப்கானிஸ்தான் மக்களின் உரிமைகள் குறித்து மத்திய அரசு கவலை கொள்கிறது, ஆனால் காஷ்மீரில் என்னையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளது என காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி கூறியுள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. எனவே, அசம்பாவிதச் சம்பவங்களை தவிர்ப்பதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாதத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, அம்மாநில முன்னாள் முதல்வரும், பிடிபி எனும் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி, முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி மூத்த தலைவருமான ஒமர் அப்துல்லா ஆகியோர் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டனர்.
இதனைத்தொடர்ந்து பெரும்பாலான தலைவர்கள் ஓராண்டுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபாமுப்தி விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வந்தார். அவர் மீது பொது பாதுகாப்புச் சட்டமும் பாய்ந்தது.
13 மாத வீட்டுச் சிறைக்கு பின் அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். இந்தநிலையில் அவர் தான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
‘‘ஆப்கானிஸ்தான் மக்களின் உரிமைகள் குறித்து மத்திய அரசு கவலை கொள்கிறது. ஆனால் காஷ்மீர் மக்களின் உரிமையை அதே மத்திய அரசு திட்டமிட்டு மறுக்கிறது. காஷ்மீரில் நிலைமை சாதாரணமாக இல்லாததால் நான் இன்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன். இது அவர்களின் இயல்பான ஏமாற்றுவேலை. மத்திய அரசின் போலித்தனம் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது" எனக் கூறியுள்ளார்.