Published : 07 Sep 2021 03:13 AM
Last Updated : 07 Sep 2021 03:13 AM

சர்வதேச அளவிலான நகைச்சுவை வனவிலங்கு விருதுக்கான இறுதிப் போட்டிக்கு 42 புகைப்படங்கள் தேர்வு

சிரிக்கும் பாம்பு

புதுடெல்லி

நகைச்சுவை வனவிலங்கு புகைப்பட விருதுக்கான இறுதிப் போட்டிக்கு 42 புகைப்படங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன.

தான்சானியாவை சேர்ந்த வன விலங்கு புகைப்பட கலைஞர்கள் பால் ஜாய்ன்சன் ஹிக்ஸ், டாம் சுல்லம் ஆகியோர் கடந்த 2015-ம் ஆண்டில் நகைச்சுவை வனவிலங்கு புகைப்பட விருதை ஏற்படுத்தினர். நடப்பு 2021-ம்ஆண்டு விருதுக்காக இந்தியா, தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா என உலகம் முழுவதும் இருந்து 7,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் அனுப்பப்பட்டன. இவற்றில் இருந்து 42 நகைச்சுவையான புகைப்படங்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளன.

இந்திய வனவிலங்கு புகைப்பட கலைஞர் ஆதித்யா, மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் கண்கொத்தி பாம்பின் புகைப்படத்தை போட்டிக்கு அனுப்பினார். இது இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

கண்கொத்தி பாம்புகள் தங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கும் திசையில் வாயை விரிவாக திறந்து தலையை தூக்கி காட்டும். இந்த கோணத்தில் ஆதித்யா எடுத்த புகைப்படம், பாம்பு சிரிப்பது போன்று காணப்படுகிறது.

சிங்கப்பூரில் சுமார் 90-க்கும் மேற்பட்ட நீர் நாய்கள் உள்ளன. இந்தவனவிலங்கை அந்த நாட்டு அரசு பேணிப் பாதுகாத்து வருகிறது. அங்குள்ள நீர்நிலையில் தண்ணீரில் நீந்தாமல் கரைக்கு ஓடிச் சென்ற நீர் நாய் குட்டியை, தாய் கவ்விப்பிடித்து தண்ணீருக்குள் இழுக்கும் புகைப்படத்தை சி கீ டியோ என்பவர் புகைப்படம் எடுத்தார். இதுவும் இறுதிப் போட்டியில் இடம்பெற்றிருக்கிறது.

உகாண்டாவில் ஒட்டகச் சிவிங்கியின் மீது குரங்கு ஏறி சவாரி செய்யும்அழகை நெதர்லாந்து புகைப் படகலைஞர் டர்க் ஜன் படம் பிடித்தார்.‘‘கூட்டமாக விளையாடிக் கொண்டிருந்த குரங்குகளில் ஒன்று ஒட்டகச் சிவிங்கியின் மீது ஏறி சிறிது நேரம் சவாரி செய்தது. அந்த அரிய காட்சி எனது கேமராவில் சிக்கியது. இறுதி போட்டியில் எனது புகைப்படம் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று டர்க்-ஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள தடோபா அந்தேரி புலிகள் சரணாலயத்தில் லங்கர் வகை குரங்குகள் அதிகம் காணப்படுகின்றன. நீண்ட வால் உடைய இந்த குரங்குகள் அதிக சேட்டை செய்யும். தடோபா சரணாலயத்தில் லங்கர் குரங்கின் அட்டகாசமான நடனத்தை புகைப்பட கலைஞர் சரோஷ் லோதி தனது கேமராவில் படம் பிடித்தார். இதுவும் இறுதிபோட்டிக்கு தேர்வாகி உள்ளது.

உத்தராகண்ட்டில் அமைந்துள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் ஒருபுலி மரக்கிளையை தாங்கிப் பிடித்திருக்கும் காட்சியை சித்தான்ட் அகர்வால் படம் பிடித்துள்ளார். அவரதுபுகைப்படமும் இறுதிப் போட்டியில் உள்ளது. இவை உட்பட வனவிலங்குகளின் பல்வேறு நகைச்சுவையான புகைப்படங்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. வரும் அக்டோபர் 22-ம் தேதி விருது அறிவிக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x