

தமிழக முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததற்கு ஏராள மான ஆதாரங்கள் இருப்பதாக கர்நாடக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இறுதி வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கர்நாடக அரசு தரப்பு இறுதி வாதத்தை தொடங்க நீதிபதி பினாகி சந்திரகோஷ் அனுமதியளித்தார்.
இதையடுத்து மூத்த வழக்கறி ஞர் துஷ்யந்த் தவே, ''கடந்த 1991-96 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.55 கோடி சொத்து குவித்தார் என்பதை தக்க ஆதாரங்களுடன் நிரூபித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா குற்ற வாளிகளுக்கு தண்டனை விதித் தார். ஆனால் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழக்கை முறையாக விசாரிக்காமல் ஜெயலலிதா தரப்பை விடுதலை செய்தார்.
குமாரசாமியின் தீர்ப்பில் ஏராள மான தவறுகளும், சொத்துக்களை மதிப்பீடு செய்ததில் அடிப்படை கூட்டுப் பிழைகளும் நிறைந்தி ருக்கின்றன. இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தனியார் நிறுவனங்கள் தொடங்கி ஜெயலலிதாவுக்கு பினாமியாக செயல்பட்டுள்ளனர். ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் கூட்டுச்சதியில் ஈடுபட்டதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
மேலும் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு ரொக்கமாக ரூ.2 கோடி அன்பளிப்பாக வந்ததாக நீதிபதி குமாரசாமி கூறுவது நம்பும்படி இல்லை. எனவே நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை ரத்து செய்துவிட்டு, நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்''என்றார்.
இதையடுத்து நீதிபதி பினாகி சந்திரகோஷ், '' இவ்வழக்கின் அரசு தரப்பு மற்றும் குற்றவாளிகள் தரப்பு சாட்சி பட்டியலை தனித்தனியாக தாக்கல் செய்யுங்கள். மேலும் மனுதாரர் ஒவ்வொருவரும் குற்றம் சாட்டப்பட்டோரின் வருமானம், கடன், சொத்து விவரங்கள் தொடர்பாக பட்டியல் தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள். இது தவிர தங்களது இறுதிவாதத்தின் தொகுப்பை மிக சுருக்கமாக தாக்கல் செய்ய வேண்டும்''எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
கர்நாடக அரசு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே 2-வது நாளாக தனது இறுதிவாதத்தை இன்றும் தொடருவார் என தெரிகிறது.