தேசப்பற்று குறித்து பாடம் சொல்லித் தர வேண்டாம்: பாஜக மீது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தாக்கு

தேசப்பற்று குறித்து பாடம் சொல்லித் தர வேண்டாம்: பாஜக மீது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தாக்கு
Updated on
1 min read

தேசப்பற்று குறித்து ஆர்எஸ்எஸ், பாஜக பாடம் சொல்லித் தர வேண்டாம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் தேச விரோத சக்திகளுக்கு ராகுல் ஆதரவு அளிப்பதாக பாஜகவும் ஆர்எஸ்எஸும் குற்றம்சாட்டியுள்ள நிலையில் ராகுல் இவ்வாறு கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனது சொந்த தொகுதியான அமேதியில் உள்ள சலோன் என்ற இடத்தில் விவசாயிகளுடன் அவர் நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

நமது நாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிராக யாராவது குரல் எழுப்பினால் அதை நசுக்கும் முயற்சிகளை கண்கூடாக பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸும் பாஜகவும் எனக்கு தேசப்பற்று பற்றி பாடம் சொல்லத் தேவையில்லை. தேசப்பற்று எனது ரத்தத்தில் ஊறியது. தேசத்துக்காக எனது குடும்பத்தினர் தொடர்ந்து தியாகம் செய்து வருகின்றனர்.

நாட்டில் இப்போது விலைவாசி அதிகரித்துவிட்டது. பருப்பு விலை ஏழைகளுக்கு எட்டாத வகையில் எங்கோ சென்றுவிட்டது.

தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா ரூ. 15 லட்சம் தருவதாக சொன்ன மோடி அதை நிறைவேற்ற வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்.

விவசாயிகள் எத்தனையோ பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அது பற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in