

இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குனராக ராஜேந்திர சிங் நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த துறைக்கு கடற்படை சாராத அதிகாரி ஒருவர் தலைமை பொறுப்பேற்பது இதுவே முதல்முறை.
கடந்த 1980-ம் ஆண்டின் இந்திய கடலோர காவல் படை முதல் பேட்ச்சை சேர்ந்தவர் ராஜேந்திர சிங். கடலோர காவல் படையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடந்தபோது, துணை அட்மிரல் ஹெச்.சி.எஸ். பிஷ்ட்டின் பொறுப்புகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
பின்னர் இந்திய கடலோர காவல் படையின் கூடுதல் இயக்குனர் ஜெனரலாக பதவி வகித்தார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி இவரை இயக்குனர் ஜெனரலாக நியமித்து மத்திய அமைச்சரவையின் நியமன கமிட்டி உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குனர் ஜெனரலாக ராஜேந்திர சிங் நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த பதவிக்கு இந்திய கடற்படையை சாராத அதிகாரி ஒருவர் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.
கடலோர பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகள், நிர்வாகம், கொள்கை முடிவுகள் ஆகியவற் றில் ராஜேந்திர சிங் மிகுந்த அனுபவம் மிக்கவர். இதன் காரணமாகவே தலைமை பொறுப்புக்கு இவர் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடலோர காவல் படையில் சிறந்த சேவையாற்றியதற்காக கடந்த 1990-ம் ஆண்டு ராஜேந்திர சிங்குக்கு குடியரசு தலைவர் தத்ரக் ஷக் பதக்கம் (டிஎம்) வழங்கி கவுரவித்தார். இதே போல், 2002-ல் குடியரசு தலைவரின் தத்ரக் ஷக் பதக்கமும் (பிடிஎம்) பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.