

100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இமாச்சலப்பிரதேசம் சாம்பியனாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கோவிட் தடுப்பூசி திட்ட பயனாளிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று கலந்துரையாடினார். கூட்டத்தினரிடம் பிரதமர் மோடி பேசியதாவது:
100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இமாச்சலப்பிரதேசம், சாம்பியனாக உருவெடுத்துள்ளது. தகுதியான அனைத்து மக்களுக்கும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் உருவாகியுள்ளது.
இந்த வெற்றி, தன்னம்பிக்கை மற்றும் தற்சார்பின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது. மக்களின் உணர்வு மற்றும் கடின உழைப்பு காரணமாக இந்தியாவில் தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றுள்ளது. நாள் ஒன்றுக்கு 1.25 கோடி பேருக்கு சாதனை வேகத்தில் இந்தியா தடுப்பூசி செலுத்துகிறது.
இந்தியாவில் ஒரு நாளில் செலுத்தப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம். தடுப்பூசி பிரச்சாரத்தில், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பை பாராட்டுகிறேன்.
தெய்வங்களின் பூமியாக இருக்கும் இமாச்சலப் பிரதேசம், கூட்டுறவு மாதிரியை பின்பற்றுகிறது. லகால்-ஸ்பிதி போன்ற தொலைதூர மாவட்டத்தில் கூட 100 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி இமாச்சலப் பிரதேசம் முன்னணியில் இருக்கிறது.
அடல் சுரங்கப்பாதை கட்டப்படுவதற்கு முன்பு, இந்த பகுதி, நாட்டின் பிற பகுதியிலிருந்து பல மாதங்களாக துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பது வழக்கம். தடுப்பூசி முயற்சிகளை தடுக்கும் எந்த வதந்தி மற்றும் தவறான தகவல்களுக்கும் இடம் கொடுக்காமல் இருந்ததற்காக இமாச்சலப் பிரதேச மக்களை பாராட்டுகிறேன்.
உலகின் மாபெரும் மற்றும் வேகமான தடுப்பூசி பிரச்சாரத்தை நாட்டின் கிராம சமுதாயம் எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதற்கு இமாச்சல் தான் சான்று.
வலுப்படுத்தப்பட்ட இணைப்பால் சுற்றுலாத்துறை நேரடியாக பயன் பெறுகிறது. காய்கறிகள், பழங்கள் விளைவிக்கும் விவசாயிகளும் பயனடைகின்றனர். கிராமங்களில் இணையதள இணைப்பை பயன்படுத்தி, இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் , தங்களின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவின் புதிய வாய்ப்புகள் குறித்து நாட்டுக்கும், உலகுக்கும் தெரிவிக்க முடியும்.
சமீபத்திய, ட்ரோன் விதிமுறைகளை பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்த விதிமுறைகள் சுகாதாரம் மற்றும் வேளாண் துறைகளில் பல செயல்பாடுகளில் உதவும். இது புதிய வாய்ப்புகளுக்கான கதவை திறக்கும். பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பு ஆன்லைன் தளத்தை, மத்திய அரசு உருவாக்க உள்ளது.
இதன் மூலம் நமது சகோதரிகள் தங்கள் தயாரிப்புகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்க முடியும். ஆப்பிள், ஆரஞ்சு, கின்னவ், காளான், தக்காளி போன்றவற்றை நாட்டின் எந்த பகுதியிலும் அவர்களால் விற்க முடியும்.
அடுத்த 25 ஆண்டுகளில் இயற்கை விவசாயத்தை இமாச்சலப் பிரதேச விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
படிப்படியாக, நமது மண்ணை ரசாயனங்களில் இருந்து விடுவிக்க முடியும்.