

கேரளாவில் நிபா வைரஸுக்கு சிறுவன் பலியாகியுள்ள நிலையில் அங்கு மேலும் 7 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது.
கேரளாவில் ஏற்கெனவே கரோனா பாதிப்பு குறையாதநிலையில் நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 12வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். கடந்த4 நாட்களாக அந்த சிறுவனுக்கு தொடர்ந்து அதிகமான அளவு காய்ச்சல் இருந்தது. இதையடுத்து, அந்த சிறுவனின் உடலில் இருந்து ரத்தமாதிரிகள், எச்சில் உள்ளிட்டவை எடுத்து புனே வைரலாஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த பரிசோதனையில் அந்த சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் அந்த சிறுவன் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.
நிபா வைரஸ், பழம்தின்னி வவ்வால்களில் இருந்து பரவும். நிபா வைரஸ் உறுதியானதையடுத்து, அந்த சிறுவனுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு, தேடப்பட்டு வருகின்றனர். அவர்களை தனிமைப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.
இந்தநிலையில் கேரளாவில் மேலும் 7 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களது ரத்தமாதிரிகள், எச்சில் உள்ளிட்டவை எடுத்து புனே வைரலாஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேசிய வைராலஜி நிறுவனத்தில் இருந்து ஏழு பேரின் சோதனை முடிவுகள் இன்று மாலைக்குள் கிடைக்கும் என்று கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முடிவுகள் வந்த பிறகு நோய் பரவுதலின் தீவிரத்தை மதிப்பீடு செய்ய முடியும் என்று கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனினும் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை தடமறியும் முயற்சியும் நடந்து வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.