

பெங்களூரு: கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் புதிய வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.
இயற்கையான வெளிச்ச வசதி மற்றும் சூரிய மின்னுற்பத்தி மற்றும் மழை நீர் சேகரிப்பு வசதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டதாக இந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது.
பயன்படுத்தப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அது இங்குள்ள தோட்டத்திற்கு பயன்படுத்தப்படும். மாசுகளை நீக்கும் வகையில் காந்த ஈர்ப்பு சக்தி கொண்ட சுத்திகரிப்பான் மற்றும் புற ஊதாக் கதிர் மூலம் சுத்தப்படுத்தல் உள்ளிட்ட வசதிகளும் இந்த வளாகத்தில் ஏற்படுத்தப்படும். மத்திய பொதுப்பணித்துறை இந்த கட்டிடத்தைக் கட்டும் பொறுப்பை ஏற்றுள்ளது. வரி செலுத்துவோர் தங்கள் குறைகளை பதிவு செய்ய குறை தீர்ப்பு அரங்கம் அமைக்கப்படும். அத்துடன் சிரமம் இல்லாத வரி சேவையை அளிக்கும் ஆயகர் சேவா கேந்திராவும் இதில் இடம்பெறும்.
போதுமான எண்ணிக்கையிலான அலுவலர்கள் பணி புரிய வசதியாக இட வசதியும், பணி புரிவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் விதமாக இந்த கட்டிட வடிவமைப்பு இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.