

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஷூ வாங்கிக் கொள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரூ.364 அனுப்பியுள்ளார்.
டெல்லி குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது மாளிகையில் விருந்து அளித்தார். இந்த விருந்தில் பங்கேற்ற டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சாதாரண காலணிகளை அணிந்திருந்தார்.
இதுதொடர்பாக விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுமித் அகர்வால் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
குடியரசுத் தலைவர் மாளிகையில் வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்கும்போது எவ்வாறு உடையணிய வேண்டும் என்று சில பாரம்பரியங்கள் உள்ளன. ஆனால் நீங்கள் (கேஜ்ரிவால்) சாதாரண காலணிகளை அணிந்திருந்தது வேதனையளிக்கிறது.
குடியரசு தலைவர் மாளிகைக்கு நீங்கள் (கேஜ்ரிவால்) தர்ணா நடத்த செல்லவில்லை. இந்த நாட்டின் பிரதிநிதியாக சென்றுள்ளீர்கள். நாட்டின் கவுரவத்தைக் காப்பாற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது.
எனவே இக்கடிதத்துடன் ரூ.364 வரைவோலை அனுப்பியுள்ளேன். இதில் நல்ல ஷூ வாங்கிக் கொள்ளுங்கள். அரசியல் கட்சிகளுக்கு நான் நன்கொடை அளிப்பது இல்லை. எனவே பொதுமக்களிடம் நிதி வசூலித்து இந்தத் தொகையை அனுப்பியிருக்கிறேன்.
முதல்வர் என்ற வகையில் மாதத்துக்கு ரூ.2 லட்சத்துக்கு 10 ஆயிரம் ஊதியம் பெறுகிறீர்கள். ஆனால் ஒரு ஷூ கூட வாங்க வசதியில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.