

நாட்டைப் பாதுகாப்போம், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தி உத்தரப் பிரதேசம் முசாபர் நகரில் இன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி விவசாயிகள் மகா பஞ்சாயத்து நடத்தினர்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக விவசாயிகள் மிகப்பெரிய அளவில் திரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் அமைப்பினர் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து டெல்லியின் புறநகர் பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், மத்திய அரசு சட்டங்களை வாபஸ் பெறத் தயாராக இல்லை, இதுவரை விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 12 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் விவசாயிகள் சார்பில் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் முசாபர் நகரில் கிசான் மகா பஞ்சாயத்தில் ஒன்று திரண்டனர். இந்த மகா பஞ்சாயத்தில் உ.பி., பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், சமூக ஆர்வலர்கள் மேதா பட்கர், யோகேந்திர யாதவ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய பாரதிய கிசான் யூனியன் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகைத் நிருபர்களிடம் கூறுகையில், “இதுபோன்ற கிசான் மகா பஞ்சாயத்துக் கூட்டம் நாடு முழுவதும் நடத்தப்படும். நாட்டை விற்பனை செய்வதிலிருந்து தடுப்போம். விவசாயிகள் காக்கப்பட வேண்டும், நாடு காக்கப்பட வேண்டும். வர்த்தகம், இளைஞர்கள் காப்பாற்றப் பட வேண்டும்.
இதுதான் இந்தப் பேரணியின் நோக்கமாகும். இந்தப் பேரணிக்கு வருவோருக்காக 500 லாங்கர் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 15 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த மகா பஞ்சாயத்தில் பங்கேற்று வருகிறார்கள்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள யோகி அரசு விவசாயிகளின் சக்தியை, விவசாயத் தொழிலாளர்கள், வேளாண் ஆதரவாளர்கள் ஆகியோரின் சக்தியை உணர வேண்டும். கடந்த 9 மாதங்களில் இந்த மகா பஞ்சாயத்துதான் மிகப்பெரியதாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
விவசாயிகள் நடத்தும் இந்தப் போராட்டத்துக்கு பாஜக எம்.பி. வருண் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். வருண் காந்தி கூறுகையில், “ எங்களுடைய சொந்த ரத்தம் நடத்தும் போராட்டம், மத்திய அரசு மீண்டும் பொதுவான தளத்துக்கு வந்து விவசாயிகளுடன் பேச வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்த பிரம்மாண்ட பேரணியில் விவசாயிகள் தரப்பில் மட்டுமின்றி பெண்கள் அமைப்பும் பங்கேற்றன. கார்கள், வேன்கள், டிராக்டர்கள், லாரிகளில் ஏராளமான பெண்கள் வண்ணக் கொடிகளுடன் வந்து பங்கேற்றனர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் கூறுகையில்,“ பழங்காலத்தில் மரியாதை, மதிப்புக்காகப் போராட்டம் நடத்தினோம். இன்று அனைத்து விவசாயிகளும் சேர்ந்து கார்ப்பரேட் ராஜ்ஜியத்துக்கு எதிராகப் போராடுகிறோம்” எனத் தெரிவித்தார்.
விவசாயிகள் போராட்டத்துக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் வானில் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவுவதற்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு முசாபர் நகர் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.