Last Updated : 05 Sep, 2021 01:30 PM

 

Published : 05 Sep 2021 01:30 PM
Last Updated : 05 Sep 2021 01:30 PM

பாஜக எம்எல்ஏ சோமன் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்தார்: தேர்தலுக்குப் பின் 4-வது பேரவை உறுப்பினர் ஐக்கியம்

மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ சோமன் ராய் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் நேற்று முறைப்படி இணைந்தார். தேர்தலுக்குப் பின் மம்தா கட்சியில் இணைந்த 4-வது பாஜக எம்எம்ஏ சோமன் ராய் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரத்தில் பாக்டா தொகுதி எம்எல்ஏ பிஸ்வந்த் தாஸ், பிஷ்னுபூர் தொகுதி எம்எல்ஏ தன்மோய் கோஷ் ஆகியோர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். கடந்த ஒரு வாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த 3-வது எம்எல்ஏ சோமன் ராய் என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திரிணமூல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்குச் சென்ற சோமன் ராய் மீண்டும் சொந்தக் கட்சிக்கே வந்துவிட்டார். உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ளி கலியாகஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோமன் ராய் , நேற்று திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பர்தா சாட்டர்ஜி முன்னிலையில் இணைந்தார்.

எம்எல்ஏ சோமன் ராய் அளித்த பேட்டியில் கூறுகையில், “திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து தவறான புரிதல் காரணமாகவே நான் வெளியேறினேன். ஆனால், பாஜகவில் இணைந்தபின் அது எனது கொள்கைக்கு உடன்படாக இல்லை. ஆதலால், வளர்ச்சி இலக்கை முன்வைத்து சேவையாற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மீண்டும் இணைந்துவிட்டேன்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நான் விலகினாலும், எனது மனது, ஆத்மா அங்குதான் இருந்தது. பாஜகவின் சித்தாந்தங்களையும், பிரித்தாளும் அரசியலையும் ஏற்க மனம் வரவில்லை. மாநிலத்தை மதரீதியாகவும், மொழிரீதியாகவும், சாதிரீதியாகவும் பிரிக்க பாஜக முயன்றது. இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்” எனக் கூறினார்.

கடந்த ஜூன் மாதம் பாஜகவின் தேசிய துணைத் தலைவராக இருந்த முகுல் ராய் 4 ஆண்டுகளுக்குப் பின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 292 தொகுதிகளில் 77 தொகுதிகளில் வென்றது. பாஜக எம்எல்ஏக்களாக இருந்த நிதிஷ் பிராம்னிக், ஜெகதீஸ் சர்க்கார் ஆகியோர் மக்களவை எம்.பி. பதவியைத் தக்கவைக்க எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.

இப்போது 4 எம்எல்ஏக்கள் விலகியுள்ளதால், பாஜகவின் பலம் 71 எம்எல்ஏக்களாகக் குறைந்துவிட்டது. இந்த 4 எம்எல்ஏக்களும் அதிகாரபூர்வமாகத் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை. தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்களாகவே இருக்கிறார்கள்.

இதற்கிடையே மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் 5 தொகுதிகளுக்கும், 2 தொகுதிகளுக்குப் புதிதாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே பாஜகவைச் சேர்ந்த பல எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வருவதற்குத் தயாராக இருப்பதாகவும், அது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் தலைமையிடம் பேசி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x