Published : 05 Sep 2021 03:14 AM
Last Updated : 05 Sep 2021 03:14 AM

மே.வங்கத்தில் 3 தொகுதிக்கு செப். 30-ல் இடைத்தேர்தல்: பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டி

மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளுக்கும் ஒடிசாவில் ஒரு தொகுதிக்கும் செப். 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள பவானிபூர், சாம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கும் ஒடிசாவில் பிப்லி தொகுதிக்கும் செப்டம்பர் 30-ம்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்.3-ம் தேதிநடைபெறும் எனவும் தேர்தல் ஆணையஅறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த 2011, 2016-ல் நடைபெற்ற தேர்தல்களில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி விடுத்த சவாலை ஏற்று நந்திகிராம் தொகுதியில் அவர் போட்டியிட்டார். இதில் சுமார் 1,600 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரியிடம் மம்தா தோல்வி அடைந்தார்.

எனினும் தேர்தல் நடைபெற்ற 294 தொகுதிகளில் 213-ல் திரிணமூல் கட்சி வெற்றி பெற்றதால், மேற்குவங்க முதல்வராக தொடர்ந்து 3-வது முறையாக மம்தா பதவியேற்றார். அவர் முதல்வராக பதவியில் நீடிக்க 6 மாதங்களுக்குள் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

இதனால் பவானிபூர் தொகுதியில் மம்தா போட்டியிடுவதற்கு வசதியாக அத்தொகுதி எம்எல்ஏ ஷோபன்தேவ் சட்டோபாத்யாய கடந்த மே மாதமே பதவி விலகினார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மேற்கு வங்க அரசு கோரி வந்தது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தின் அரசியலமைப்பு அவசரநிலை கருதியும் சிறப்பு கோரிக்கையை ஏற்றும் இடைத்தேர்தல் நடத்த முடிவுசெய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. என்றாலும் மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் சில வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள31 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 3 மக்களவை தொகுதிகளுக்கு கரோனா பாதிப்பு கருதி இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் நடைமுறைகளில் கரோனா விதிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மம்தா பானர்ஜியின் கோட்டையாக கருதப்படும் பவானிபூரில் அவர் மீண்டும் போட்டியிடுவார் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x